அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக் கூறி கல்லா கட்டிய அமேசான்.. மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் என்ற பெயரில் லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை விற்பனைக்கு பட்டியலிட்ட அமேசான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாகரா கட்டடக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன.

அயோத்தியில் பால ராமருக்காக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் தொன்மை மற்றும் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலையின் கலவையாக கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகள் தாக்குப்பிடிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதாவது, இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் என்று ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ராம ஜென்மபூச்மி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்பேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
களை கட்டிய அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகளும் தொடங்கி உள்ளன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350 க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 நாளே எஞ்சியிருப்பதால் தற்போதே அயோத்தி களை கட்டியுள்ளது.
ராமர் கோவில் கோபி லட்டு: இதனிடையே, பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் என்ற பெயரில் இனிப்பு பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, அமேசானின் இணையதளத்தில் ஸ்ரீராமர் கோவில் அயோத்யா பிரசாதம் - ரகுபதி ஜியோ லட்டு, ராமர் கோவில் கோபி லட்டு என்ற பெயரில் இனிப்பு வகைகளை விற்பனை லிஸ்ட்டில் வைத்திருக்கிறதாம்.
மத்திய அரசு நோட்டீஸ்: இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக இருப்பதால் இது தொடர்பான புகார்கள் மத்திய அரசுக்கு பறந்தன. குறிப்பாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இந்த புகாரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியது. அதில், ராமர் கோவில் இன்னும் திறக்கப்படாத நிலையில், கோவில் பிரசாதம் என்ற பெயரில் இனிப்புகளை விற்பனை செய்வது நுகர்வோர்களை ஏமாற்றும் செயல் ஆகும் என்றும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தவறினால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications