ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய முயற்சி! மடத்திலேயே தடுக்கப்பட்ட சாமியார்! பரபர உத்தரபிரதேசம்
வாரணாசி: ஞானவாபி மசூதி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு பூஜை செய்வதாக கூறி புறப்பட்ட ஸ்ரீவித்யா மடத்தின் அவிமுக்தேஷ்வரனந்தா சுவாமி மடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி சுவர்களில் உள்ள கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத தெய்வங்கள், கவுரி அம்மனை ஆண்டுதோறும் வழிப்பட அனுமதி கோரி இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதிக்குள் ஆய்வு நடத்த குழு அமைத்தது. இந்த ஆய்வுக்குழு மசூதியில் ஆய்வு மேற்கொண்டது.

மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக..
இந்த வேளையில் மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் விவாதப்பொருளானது. இதற்கிடையே ஆய்வு அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

பூஜை செய்வதாக அறிவிப்பு
மாறாக இதுதொடர்பான உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக மசூதிகளில் தொழுகை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பல இந்துத்துவ அமைப்பினர் ஞானவாபி மசூதி தொடர்பாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு பூஜை நடத்தப்போவதாக ஸ்ரீ வித்யா மடத்தின் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா திடீரென்று அறிவித்தார்.

தடுத்து நிறுத்தம்
இதற்கு போலீசாரிடம் அவர் அனுமதி கோரினார். போலீசார் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவிமுக்தேஸ்வரானந்தா சுவாமி இன்று தனது பக்தர்களுடன் ஞானவாபி மசூதிக்கு செல்ல முயன்றார். இதையடுத்து சுவாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை மடத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பூஜைக்கு பிறகு தான் உணவு
இதுபற்றி சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் கூறும் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை கடவுள் பசியோடும் தாகத்துடனும் இருப்பாரா?. இதனால் பூஜை, பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் மசூதிக்குள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கோரி, போலீசிடம் நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தோம். போலீசாரிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் கிளம்பினோம். பூஜைக்கு பிறகுதான் உணவு சாப்பிடுவேன்" எனக்கூறினார்.












Click it and Unblock the Notifications