ஆந்திராவில் சோகம்.. மின்கம்பத்தில் டிராக்டர் மோதி விபத்து.. மின்சாரம் பாய்ந்து 9 பேர் உயிரிழப்பு
விஜயவாடா: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் மின்கம்பத்தின் மீது டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மச்சாவரம் கிராமத்தின் அருகே மிளகாய் நடவு பணியை முடித்துவிட்டு இன்று (வியாழக்கிழமை) 23 பேர் ஒரு டிராக்டரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மின்கம்பம் நேரடியாக டிராக்டரில் இருந்தவர்கள் மீது சரிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி டிராக்டரில் இருந்தே 9 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். 2 பேர் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அவர் உத்தரவிட்டார், மேலும் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களை பார்வையிட பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தனது அமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே டிராக்டர் விபத்தில் 9 உயிரிழந்தது குறித்து அறிந்த ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் 9 தொழிலாளர்கள் மரணம் அடைந்தது குறித்து வேதனை தெரிவித்த ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்றார். மேலும் அவர் தனது அறிக்கையில், இறந்தவர்களில் இரண்டு பேர் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து தான் மிகவும் வருந்துவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications