விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளம்பெண்: போட்டோ எடுத்து நடையை கட்டிய மக்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் விபத்தில் சிக்கி சாலையில் உயிருக்குப் போராடிய இளம்பெண்ணை பொதுமக்கள் போட்டோ எடுத்தனரே தவிர யாரும் உதவி செய்யாததால் அவர் பலியானார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அப்ஸா காத்தூன்(28). நான்கு குழந்தைகளின் தாய். அவர் வெள்ளிக்கிழமை காலை தனது மகள்கள் ஹாஷா மற்றும் அக்ஷா ஆகியோரை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் ஏஜேசி போஸ் ரோட்டில் நடந்து செல்கையில் புனித ஜான் தேவாலயம் முன்பு தனியார் பள்ளி பேருந்து ஒன்று அரசு பேருந்தை முந்த முயன்று அப்ஸாவின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சாலையில் விழுந்து துடித்தார். ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் இந்த விபத்து நடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போன்களில் அப்ஸா உயிருக்கு போராடியதை போட்டோ எடுத்துவிட்டு அவருக்கு உதவாமல் சென்றுவிட்டனர். அப்ஸாவின் வீடு அருகில் உள்ள பகுதியில் இருப்பதால் அவர் விபத்தில் சிக்கிய விவரம் அங்கு பரவியது.
இதையடுத்து அவரது அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவந்து 25 நிமிடங்கள் சாலையில் உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவமனையில் அவர் தனது கணவரின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை அளித்துவிட்டு இறந்துவிட்டார். மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அப்ஸா இறந்ததாக அவரது சகோதரர் புகார் தெரிவித்தார். ஆனால் தாங்கள் முறையான சிகிச்சை அளித்ததாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே மோசமான நிலையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்ஸாவின் இளைய மகள் 3 மாதக் குழந்தை ஆகும். பள்ளியில் மகள்களை விட்டுவிட்டு வந்து குழந்தைக்கு உணவு அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்ற என் மனைவி இறந்துவிட்டாரே என்று அப்ஸாவின் கணவர் சித்திக்கி கண்ணீர் சிந்தினார்.












Click it and Unblock the Notifications