செப். 24ல் மீண்டும் பந்த்… திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டம் என அறிவிப்பு
ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலத்தை வலியுறுத்தி வரும் 24ம் தேதி பந்த் நடைபெற உள்ளதால் திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமந்திரா பிராந்தியத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் நீடிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களால் கடந்த இரண்டு மாதங்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 24-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று போராட்டக்குழு இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராமச்சந்திர ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 24-ம் தேதி வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பஸ்களை நிறுத்தி போராட்டம் நடத்த உள்ளதால், திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.
புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் அதிக அளவில் ஆந்திராவிற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்யச் செல்வார்கள். இதற்காகவே தரிசன டிக்கெட், தங்குமிடங்களுக்கு ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். அன்றைய தினம் பந்த் என்பதால் ரிசர்வ் செய்த பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications