நீட் மோசடி விவகாரம்.. வினாத்தாள் கிடைத்தும் கெமிஸ்ட்ரி பாடத்தில் கைதான இளைஞர் வெறும் 5 மார்க் தான்!
பாட்னா: இந்தாண்டு நீட் முறைகேடு விவகாரம் மிகப் பெரியதாக வெடித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஒரு பக்கம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இதில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே நீட் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் பெற்ற மார்க் விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாகப் பீகாரைச் சேர்ந்த அனுராக் யாதவ் என்ற மாணவர் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அனுராக் யாதவிற்கு தான் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கிடைத்துள்ளது. இதற்கிடையே அவர் நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண்களைப் பெற்றார் என்பது குறித்த தகவல்களைப் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

நீட்: இந்த அனுராக் யாதவ், கோச்சிங் சென்டர் ஹப் எனப்படும் கோட்டாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டு இருந்துள்ளார். தேர்வுக்கு முன்பு அவரை தொடர்பு கொண்ட அவரது மாமா சிக்கந்தர் உடனடியாக சொந்த ஊர் திரும்பும்படி கூறியுள்ளார். பரீட்சைக்குத் தயாராக வேண்டும் என அனுராக் யாதவ் சொன்னபோது அந்த சிக்கல் சரி செய்யப்பட்டுவிட்டது எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அனுராக்கும் தனது சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார்.
அங்கு அவருக்கு நீட் தேர்வு வினாத்தாள் கிடைத்துள்ளது. இதை அவர் விடிய விடிய மனப்பாடம் செய்துள்ளார். சரியாக இதே கேள்விகள் தான் மறுநாள் கேள்வித்தாளில் இடம்பெற்று இருக்கிறது. இதை எல்லாம் கைது செய்யப்பட்ட அனுராஜ் யாதவ் வாக்குமூலமாகவே அளித்து இருக்கிறார். இந்த வழக்கை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அனுராக் யாதவ்: இதற்கிடையே நீட் தேர்வில் இந்த அனுராக் யாதவ் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அனுராக் யாதவ் 720க்கு 185 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த சதவிகிதம் 54.84 ஆகும். இதில் விஷயம் என்னவென்றால் பாடம் வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் தான் சுவாரசியமானது. அதாவது அவர் இயற்பியல் பாடத்தில் 85.8 மார்க், பயாலஜியில் 51 சதவீத மார்க் பெற்றுள்ளார்.
வெறும் 5 மார்க்: அதேநேரம் கெமிஸ்டரி பாடத்தில் வெறும் 5 மார்க் மட்டுமே அவர் பெற்றுள்ளார். முந்தைய நாள் இரவே வினாத்தாள் கிடைத்த போதிலும் கெமிஸ்டரி வினாக்களுக்கான பதிலை மனப்பாடம் செய்ய அவருக்கு போதிய டைம் கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அனுராக் அகில இந்திய அளவில் 10,51,525ஆவது ரேங்கை பெற்றுள்ளார். ஓபிசி பிரிவில் 4,67,824 ரேங்கை பெற்றுள்ளார்.
ரூ. 40 லட்சம்: இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் தான் நீட் தேர்வு வினாத்தாளைக் கசிய விட்டுள்ளனர். அவர்கள் ஒரு மாணவருக்கு ₹ 30-32 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் இடைத்தரகராகச் செயல்பட்ட சிகிந்தர் 4 மாணவர்களிடம் ரூ. 40 லட்சம் வாங்கி இருக்கிறார்.
அனுராக் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் தேர்வில் 720க்கு 300 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், மேலும் அவரது ஒட்டுமொத்த மார்க் 73.37 ஆகும். அவர் உயிரியலில் 87.8 சதவீதமும், இயற்பியல் மற்றும் வேதியியலில் 15.5 மற்றும் 15.3 சதவீதமும் பெற்றுள்ளார்.மற்ற இரண்டு மாணவர்களின் மதிப்பெண் அட்டைகள், மூன்று பாடங்களிலும் ஒழுக்கமான நிகழ்ச்சியைக் குறிக்கின்றன. அவர்களில் ஒருவர் 720க்கு 581 மதிப்பெண்களும் மற்றவர் 483 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications