காங்.க்கு கேஜ்ரிவால் கொடுத்த முதல் ஷாக்.. டெல்லி விஜிலன்ஸ் அதிகாரி மாற்றம்
டெல்லி: டெல்லி மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவரை அதிரடியாக மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு முதல் ஷாக் கொடுத்திருக்கிறார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி மாநிலத்தில் 15 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சிக் காலத்தில் பல ஊழல் புகார்கள் எழுந்தன. இப் புகார்கள் அனைத்தும் மாநில ஊழல் தடுப்பு பிரிவிடம் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு தலைவரை அதிரடியாக மாற்றியிருக்கிறார் முதல்வர் கேஜ்ரிவால். இதைத் தொடர்ந்து நேற்று ஊழல் தடுப்பு பிரிவு புதிய தலைவர் கைலாஷ் சந்தெர், அவரது செயலர் ராஜேந்தர் குமார், ஓய்வு பெற்ற இணை செயலர் விகே மிட்டல், மூத்த காவல்துறை அதிகாரி திவேதி ஆகியோருடன் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் கேஜ்ரிவால் நேற்று தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அப்போது, ஊழல் புகார் மீதான விசாரணையில் எந்த ஒரு பரிந்துரையையும் அரசியல் தலையீட்டையும் அனுமதிக்க வேண்டாம்.. ஊழலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கேஜ்ரிவால்.
மேலும் கேஜ்ரிவால் தரப்பு ஊழல் தடுப்பு ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்குவதிலும் மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக மத்திய பிரதேச முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.சி. பெஹெராவை நியமிக்கவும் கேஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து ஊழல் தடுப்பு விவகாரங்களில் கேஜ்ரிவால் மும்முரம் காட்டுவது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டெல்லி மாநில முன்னாள் அமைச்சர் ஒருவர், டெல்லி அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெறக் கூடாது.. அப்படி திரும்பப் பெற்றால் காங்கிரஸ் தலைவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே கேஜ்ரிவால் இப்படி செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications