சொகுசு வீட்டை நிராகரித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆம் ஆத்மி மாறத்தொடங்கியதாக எழுந்த சர்ச்சையத் தொடர்ந்து 5 படுக்கை அறைகளைக் கொண்ட சொகுசு பங்களாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்துள்ளார்.எளிமையான வீட்டை ஒதுக்கும்படி அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, அரசு செலவினங்களில் சிக்கனம், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட முற்போக்கு முழக்கங்களுடன் ‘ஆம் ஆத்மி' கட்சியை தொடங்கியவர் அரவிந்த் கேஜ்ரிவால்.

டெல்லி நண்பர் ஒருவர் வாடகையின்றி வழங்கிய சிறிய பங்களாவிலும், அரசு ஊழியரான அவரது மனைவிக்கு காசியாபாத் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்பிலும் தங்கியிருந்த கேஜ்ரிவால், தற்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் வீடு அமைந்துள்ள பகவான் தாஸ் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் குடியேற முடிவு செய்தார்.
இதற்காக, கதவு எண் 7/6 மற்றும் 7/7 என அடுத்தடுத்து இரண்டு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த 2 பங்களாக்களும் 9 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 6 ஆயிரம் சதுரடி கட்டடங்கள் கொண்டவை. இவை இரண்டிலும் 10 படுக்கை அறைகள், பசுமையான புல்வெளி மற்றும் பணியாளர்களுக்கான தனி வீடுகளுடன் அனைத்து நவீன வசதிகள் கொண்டது.
டெல்லி தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டதையடுத்து, இந்த 2 பங்களாக்களின் சாவிகளும் கடந்த 1ஆம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பங்களாக்களுக்கும் இடையில் உள்ள மதில் சுவரை இடித்து விட்டு, வர்ணப்பூச்சு உள்ளிட்ட இதர பணிகள் முடிந்த பின்னர் இந்த புதிய வீட்டில் அரவிந்த் கேஜ்ரிவால் குடியேற இருந்தார்.
கதவு எண் 7/6-ஐ தனது இல்லமாகவும், 7/7-ஐ முதல்வரின் அலுவலகம் ஆகவும் கேஜ்ரிவால் பயன்படுத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் அமைச்சர்களுக்கும் சொகுசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆம் ஆத்மியின் சிக்கன நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியது. இதையடுத்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது முடிவை மாற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
