கோவிலா? மசூதியா? அயோத்தி, மதுரா, வாரணாசி போல ம.பி. போஜ்சாலா- அதிரவைக்கும் தொல்லியல் துறை அறிக்கை!
போபால்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தி, வாரணாசி மற்றும் மதுராவைப் போல மத்திய பிரதேச மாநிலத்தின் போஜ்சாலாவும் சர்ச்சையாகி இருக்கிறது. போஜ்சாலா என்பது கோவிலா? மசூதியா? என்பது தொடர்பாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி 2,000 பக்க ஆய்வறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதேநேரத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த ம.பி. உயர்நீதிமன்றம் அனுமதித்ததற்கு எதிரான மனுவை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறப்பட்டு பெரும் ரத்த களரியை தேசம் எதிர்கொண்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் சர்ச்சைக்குரிய நிலமானது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது அங்கு பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல வாரணாசி, மதுராவிலும் கோவில்கள் இருந்த இடங்களில்தான் மசூதிகள் கட்டப்பட்டன என்கிற சர்ச்சை நீடிக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் போஜ்சாலாவும் இந்த சர்ச்சைப்பட்டியலில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. கிபி 12-ம் நூற்றாண்டில் தார் மன்னர்கள் கட்டிய சரஸ்வதி கோவிலை முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்து மசூதி கட்டினர் என்பது சர்ச்சை. இந்துக்கள் தரப்பு சரஸ்வதி கோவில் என்றும் முஸ்லிம்கள் தரப்பில் கமால் மவுலானா மசூதி எனவும் போஜ்சாலா அழைக்கப்பட்டு வருகிறது. அயோத்தியில் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போஜ்சாலாவை தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில் பல்வேறு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 2023-ம் ஆண்டு வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் செவ்வாய்க்கிழமையன்று இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் போஜ்சாலாவில் அறிவியல் பூர்வமான ஆய்வு கோரி ம.பி. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ம.பி. உயர்நீதிமன்றம், போஜ்சாலாவில் தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனடிப்படையில் தொல்லியல் துறை அறிஞர்கள் ஆய்வு நடத்தி 2,000 பக்க ஆய்வறிக்கையை ம.பி. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
தொல்லியல் துறை ஆய்வறிக்கையில், இந்து தெய்வங்களுடனான கோவில் கல்தூண்கள், 1000-க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன. இதனால் போஜ்சாலா முன்னர் இந்து கோவிலாக இருந்தது என கருதப்படுகிறது.
இந்த நிலையில் போஜ்சாலாவில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னர் இந்த மனுவை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம். தற்போது அதே போல இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications