சூடான சுவையான “ஜெலன்ஸ்கி டீ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்ட்ராங்கா இருக்குமாம்
கவுகாத்தி : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் வீரத்தையும் ரஷ்யாவுக்கு எதிரான அவரது தைரியத்தையும் பாராட்டும் வகையில் ஜெலன்ஸ்கி டீ என்ற புதிய பிராண்ட் டீத்தூளை அசாமை சேர்ந்த தேயிலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதலில் நிலைகுலைந்தாலும் , உறுதியுடன் களமாடி வருகின்றனர் உக்ரைன் ராணுவத்தினர்.
உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக மக்களும் ஆயுதங்கள் ஏந்தி போரில் களமிறங்கி வருகின்றனர். அதிபர் வோலோடிமிரை குறிவைத்து தலைநகர் கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்ய ராணுவம்.

ரஷ்ய வீரர்கள் பலி
25ஆம் நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீர் மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கிட்ட தட்ட முழுமையாக சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இருந்தும் உக்ரைன் மன உறுதியோடு போராடி வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார்
ஆயுதங்களை கைவிட்டு விட்டு தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தை குழுவையும் ரஷ்யா அனுப்பினாலும் உக்ரைன் சரணடைய வேண்டும் எனக் கூறியுள்ளது. இருந்தும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனவும் உக்ரைன் ராணுவத்தை சரணடைய அதிபர் வோலோடிமிர் உத்தரவிட்டதாக முதலில் செய்திகள் பரவியது. அதனை மறுத்துள்ள அவர் தாங்கள் தொடர்ந்து போரிடுவோம் என கூறியுள்ளார். தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உலகளவில் ஜெலன்ஸ்கி நன்கறியப்பட்ட நபராக மாறியுள்ளார்.

ஜெலன்ஸ்கி டீ
இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரோமிகா டீ என்ற தேயிலை நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெயரில் டீயை அறிமுகம் செய்துள்ளது. அஸ்ஸாம் தேநீர் அதன் இனிமையான திடமான சுவைக்காக உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படுகிறது. இந்நிலையில் உக்ரேனிய ஜனாதிபதி எவ்வாறு துன்பங்களை எதிர்கொண்டு நிற்கிறார் என்பதைப் பார்க்கும்போது, இந்த புதிய டீக்கு அவரது பெயரை வைப்பது மிகவும் பொருத்தமானதாகத் தோன்றியது என அரோமிக நிறுவனத்தின் ரஞ்சித் பருபா கூறியுள்ளார். பலம் வாய்ந்த ரஷ்யா தாக்கிய போது ஜெலன்ஸ்கியை வெளியேற்றுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் வாய்ப்பை அவர் எப்படி நிராகரித்தார் என்பது என்னை மிகவும் கவர்ந்தது என்கிறார் பருவா.

வலிமையான ஜெலன்ஸ்கி
அவர் தப்பியோடாமல் தங்கள் நாட்டின் படையை முன்னோக்கி வழிநடத்த முடிவு செய்தது, இந்த நேரத்தில் அவரை விட வலிமையானது எதுவும் உலகில் இல்லை, எனவே, இந்த தேநீர் ஜெலென்ஸ்கியைப் போலவே வலுவானது என்று ஒரு பெருமையான தோற்றத்தை உருவாக்கு முயற்சித்ததாகவும், தற்போதைய நிலவரப்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெலஸ்கி டீ தேயிலை கவுகாத்தியை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் எனவும், மேலும் அடுத்த 10-15 நாட்களுக்குள் பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் வாங்க முடியும் என்று ரஞ்சித் பருவா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications