வறுத்தெடுக்கும் அக்னி வெயில்… நாடுமுழுவதும் 1100 பேர் பலி
டெல்லி: அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் சுருண்டு விழுந்து பலியாகிவின்றனர். கடந்த சில வாரங்களாக வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். ஆந்திராவில் மட்டும் கடும் வெப்பத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 852 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் 266 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக தலைநகரம் சென்னையில் அதிகபட்சமாக 109 டிகிரிவரை வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரையில் கடும் வெயிலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கோடையில் கடும் வெயிலும் பருவம் தப்பிய மழையும் பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரம் தற்போது அதிகரித்து வருகிறது. ஆந்திரா,ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெயிலின் தீவிரம் அதிகமாகவே காணப்படுகிறது. அனல்காற்று வீசிவருகிறது. ஒடிசாவில் அதிகபட்சமாக 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் திங்கட்கிழமையன்று பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

காப்பாற்றிய கோடை மழை
தமிழ்நாட்டில், ஆந்திரா அளவுக்கு வெயில் கொடுமை இல்லை. காரணம் கொட்டித்தீர்த்த கோடைமழையால் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் வெயிலால் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

109 டிகிரி வெப்பம்
தமிழகத்தில் அரக்கோணத்தில் 109 டிகிரி, வேலூரில் 108 டிகிரி, கடலூர், பரங்கிப் பேட்டை 104 டிகிரி, புதுச்சேரி 105 டிகிரி, நெல்லை 103 டிகிரி, கரூர், திருச்சி 101 டிகிரி, மதுரை 101.4 டிகிரி என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஆந்திராவில் 852 பேர் பலி
கடும் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஏராளமானோர் வெயிலுக்கு பலியாகிவருகின்றனர். கடந்த ஒருவார காலத்தில் மட்டும் இதுவரை ஆந்திர மாநிலத்தில் மட்டும் 852 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 202 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 130 பேரும், விசாகப்பட்டினத்தில் 112 பேரும், கிழக்கு கோதாவரியில் 90 பேரும், விஜயநகரத்தில் 78 பேரும், நெல்லூரில் 74 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 49 பேரும், சித்தூரில் 29 பேரும், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 25 பேரும், கடப்பாவில் 22 பேரும், கர்நூலில் 17 பேரும், அனந்தபூரில் 14 பேரும், மேற்கு கோதாவரியில் 10 பேரும் பலியாகியுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் பலி
தெலுங்கானாவில் இதுவரை 266 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் வட மாநிலங்களில் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

இன்னும் கொளுத்தும்
வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இன்னும் இருதினங்களில் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனல்காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications