அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. வீடுகளில் ஒளிரட்டும் ராம ஜோதி.. பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று மக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கு கொண்டு ராம ஜோதி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஏழ்மை என்னும் இருளை நீக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் ஆலய கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி திறப்பு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 22ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ராவும், அவரது மனைவியும் இந்த வழிபாடுகளில் தொடர்ந்து பங்கேற்பார்கள்.

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் 7வது நாள் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். அவர் சிறப்பு விருந்தினராக இருப்பார். பிரதான பூஜை, வழிபாடுகளில் அனில் மிஸ்ரா தம்பதியினரே பங்கேற்பார்கள். சிலை பிரதிஷ்டையின்போது கோயில் கருவறைக்குள் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அனில் மிஸ்ரா தம்பதியர் உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவார்கள்
அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையானது, தென்னிந்தியாவின் பழமையான பாறையில் இருந்து செதுக்கப்பட்டது என்றும், இந்தக் கல் 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ராமர் சிலை செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பே விரதத்தை தொடங்கி விட்டார் பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள ராமர் ஆலயங்களுக்கும், ராமர் தொடர்பான ஆலயங்களுக்கும் ஆன்மீக யாத்திரை சென்று கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆலயங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் பிரதமர் மோடி.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா காண உள்ளதை ஒட்டி பக்தி பரவசமான சூழல் உருவாகி இருக்கிறது. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அந்த ராம ஜோதி நமது நாட்டின் ஏழ்மையைப் போக்க நம்மை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
14 ஆண்டு காலம் வனவாசம் முடிந்து அயோத்திக்கு ராமர் திரும்பிய நாளை தீபாவளி தினமாக கொண்டாடி வருகின்றனர் உத்தரபிரதேச மாநில மக்கள். தீபாவளிக்கு முன்பாக சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றுவார்கள். அதே போல ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று நாட்டு மக்கள் தங்களின் வீடுகளில் ராம ஜோதி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 106 நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள்ளது, இதில் கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் ராம ஜோதி ரத ஊர்வலதில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேர் குடும்பத்தினருக்கு, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990ஆம் ஆண்டு அக்டோபர் 10ல், அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடந்த ஸ்ரீராமஜோதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸ் துப்பாக்கி ராமபக்தர்கள் நரசிம்மய்யா, பாபு, சங்கர், ராஜா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த 4 பேரின் குடும்பத்தினரும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு துணையாகவும், வழிகாட்டவும் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த விஎச்பி பிரமுகர் பாபு என்பவரும் அழைக்கப்பட்டுள்ளார்.
திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத் ராய்,ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதற்கான பூஜை வழிபாடுகள் 16ஆம் தேதி தொடங்கின. 22ஆம் தேதி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். இந்த வழிபாட்டின்போது நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த இசைக் கருவிகளும் இசைக்கப்படும். 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்கிறார்.
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் அரசு அலுவலகங்களுக்கு முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சண்டிகர் யூனியன் பிரதேசமும் முழுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், ஹரியானா, ஒடிஷா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன. மதுக்கடைகள், இறைச்சி கடைகளை திறக்கவும் அந்த மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.












Click it and Unblock the Notifications