முதல் நாளிலேயே தள்ளு முள்ளு.. அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு போட்டி! 3 மணிக்கே குவிந்த மக்கள்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாளான இன்று ராமரை தரிசனம் செய்ய போட்டி போட்டுக்கொண்டு மக்கள் அதிகாலை 3 மணிக்கே குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் 2019ல் அனுமதி வழங்கியது. இதையடுத்து இதையடுத்து 2020ல் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதையடுத்து பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. கோவிலில் முதல் தளம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கடந்த 18 ம் தேதி கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது.
நேற்று கும்பாபிஷேகம் தினம் என்பதால் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ராமர் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மேலும் காலை 6.30, மதியம் 12 மணி, இரவு 7.30 மணிக்கு என 3 வேளை ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதிலும் மக்கள் பாஸ் பெற்று பங்கேற்கலாம்.
இந்நிலையில் தான் முதல் நாளான இன்று அதிகளவிலான மக்கள் ராமரை தரிசனம் செய்ய கூடினர். இதனால் கோவிலில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலை 3 மணி முதல் மக்கள் அதிகளவில் கூட தொடங்கினர். இவர்கள் கோவில் வளாக பகுதியில் காத்திருந்தனர். நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்தது.
காலை 7 மணிக்கு தரிசனம் தொடங்கிய நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்குள் நுழைய முயன்றனர். போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருக்கும் போலீசார் வந்து கூட்ட நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அயோத்தி ராமர் கோவிலில் காலை வேளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications