பாஸ்போர்ட் இல்லை.. காதலனை கரம் பிடிக்க இந்தியாவுக்குள் நீந்தி வந்த வங்கதேச பெண்.. அடுத்து ட்விஸ்ட்!
கொல்கத்தா: இந்தியாவில் உள்ள காதலனை மணப்பதற்காக வங்கதேசத்திலிருந்து நீர் நிலைகளில் நீந்தி சட்டவிரோதமாக நுழைந்த பெண் கைது செய்யப்பட்டார்.
காதலுக்கு கண் இல்லை, கண்ணை மறைத்த காதல், காதலித்து பார் நரகமும் சொர்க்கமாகும், காதலுக்கு ஜாதி, மதம், இனம், இடம், நாடு என எதுவும் இல்லை என்பது காதலர்களின் வீரவசனங்களுள் ஒன்றாகும்.
உண்மையான காதல் என்றால் எப்படியாவது அந்த இருவரையும் சேர்த்து வைத்துவிடும் என்பார்கள். வங்கதேசத்தில் பெண் ஒருவர் தனது காதலுக்காக என்ன செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.

22 வயது பெண்
வங்கதேச நாட்டை சேர்ந்தவர் கிருஷ்ணா மணடல். இவருக்கு 22 வயதாகிறது. இவருக்கு இந்தியாவின் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிக் மண்டல் என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் தனது காதலனை எப்படியாவது கரம் பிடிக்க கிருஷ்ணா துடித்தார்.

பாஸ்போர்ட்
ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. அதனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது என முடிவு செய்தார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது நீச்சல்! ராயல் வங்கத்து சிங்கங்களுக்கு பெயர் போன சுந்தரவனக் காடுகளில் உள்ள ஆற்றை ஒரு மணி நேரம் நீந்தி இந்திய எல்லைக்குள் அதாவது கொல்கத்தாவுக்குள் நுழைந்தார்.

காதலனை கரம் பிடித்த காதலி
நுழைந்தவுடன் ஓடி போய் தனது காதலன் அபிக்கை சந்தித்தார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள காளிகட் கோயிலில் இருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு நுழைந்ததாக கிருஷ்ணாவை போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

சட்டவிரோதம்
அவர் வங்கதேச தூதரகத்தில் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் போக்கு அதிகரித்து விட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் சாக்லெட்டை சுவைப்பதற்காக வங்கதேச சிறுவன் எமான் ஹோசைன் சிறிய ஆற்றை நீந்தியே இந்திய எல்லைக்கு வந்தடைந்தார். அந்த சிறுவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications