காஷ்மீர் தேர்தல்.. திடீரென களத்தில் குதித்த தடை செய்யப்பட்ட அமைப்பு! உற்று பார்க்கும் அரசியல் தலைகள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அங்குத் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் தெற்கு காஷ்மீரின் பல தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஜம்மு-காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு செப். 18, 25 மற்றும் அக். 1 ஆகிய மூன்று கட்டங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

அதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக். 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அங்கே ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று பல கட்சிகள் களத்தில் உள்ளனர்.
ஜமாத்-இ-இஸ்லாமி: ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளையுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. இதற்கிடையே அங்குத் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் தெற்கு காஷ்மீரின் பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்குகிறார்கள்.
அங்கே வரும் செப். 18ம் தேதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், சுமார் ஏழு வேட்பாளர்களைச் சுயேச்சைகளாக நிறுத்த இந்த அமைப்பு திட்டமிட்டு இருந்தது. இருப்பினும், அவர்களில் மூன்று பேர் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டனராம். மற்றொரு நபர் தயக்கத்தில் உள்ளதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் தற்போது வரை 3 வேட்பாளர்கள் மட்டுமே சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
3 வேட்பாளர்கள்: அதில் புல்வாமா தொகுதியின் வேட்பாளராக டாக்டர் தலாத் மஜீத் போட்டியிடுவதை ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு இறுதி செய்துள்ளது. புல்வாமா பகுதியில் வசிக்கும் தலால் மஜீத் அப்பகுதியில் நன்கு மதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 2023இல் அங்குள்ள அப்னி கட்சியில் சேர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இவர்.
அதேபோல குல்காம் தொகுதியில் இருந்து சாயர் அகமது ரேஷி போட்டியிடுகிறார். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஃபலாஹ்-இ-ஆம் அறக்கட்டளையின் உதவி இயக்குநராக இருந்த ரேஷி, குல்காமை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததாகக் கூறப்படும் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல தேவ்சர் தொகுதியில் முகம்மது சித்திக் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கிறார்.
தயக்கம்: அதேபோல ஜைன்போரா என்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம். இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறுகையில், "நான்காவது வேட்பாளர் போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அவருக்கு சில அச்சங்கள் உள்ளன. ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஒப்புக்கொண்டால் அவர் போட்டியிடுவார். அப்படி இல்லை என்றால் அந்த தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்" என்றார்.
முதலில் தெற்கு காஷ்மீரில் இருந்து 7 வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டிருந்தனர். அவர்களில் மூன்று வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டனர். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டியே வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு அங்குப் பலருக்கும் விருப்பமே இல்லை என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு: தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் முயற்சியில் ஜமாக் இ இஸ்லாமி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். தடை நீக்கம் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டு இருந்தது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வரும் போதிலும், தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications