சுப்ரீம் கோர்ட் சம்மன் வராததால் ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகவில்லை: அரசு வழக்கறிஞர் பவானிசிங்
பெங்களூர்: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வராததால் விசாரணையின்போது ஆஜராகமாட்டேன், ஒருவேளை இறுதி நேரத்தில் தகவல் தெரிவித்தால் ஆஜராகி வாதிட முயற்சிப்பேன் என அரசு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் 4 பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான பவானி சிங், ‘தனது பதவி காலத்தை நீட்டித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு முறைப்படி வழங்கப்படவில்லை.
அதனால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் ஆஜராக மாட்டேன்''என்றார். இதனால் 4 பேரின் மனுக்கள் மீதான விசாரணை தாமதமானது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்து மேல்முறையீட்டுக்கும் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அரசாணை வெளியிட்டது.
எனவே அவர் கடந்த 7-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க தனக்கு ஆட்சேபம் இல்லை'என தெரிவித்தார். இதற்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஆனால் இன்றைய விசாரணையின் போது பவானிசிங் ஆஜராக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இது குறித்து பவானிசிங் கூறுகையில், நேற்று மாலை வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழக்கில் ஆஜராகும் படி எவ்வித சம்மனும் வரவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன். ஒருவேளை கடைசி நேரத்தில் என்னை ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications