ம.பி.: குழியில் விழுந்த நபரை உயிருடன் புதைத்த சாலை செப்பனிடும் பணியாளர்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் 45 வயது நபர் ஒருவர் சாலையில் இருந்த பெரிய குழியில் தவறி விழுந்ததை கவனிக்காத ஊழியர்கள் அந்த குழியை அடைத்ததால் அவர் பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் லதோரி பர்மன்(45). அவர் கடந்த வெள்ளிக்கிழமை ரிஷி பஞ்சமி கண்காட்சிக்கு தனது மனைவியுடன் சென்றுள்ளார். கண்காட்சிக்கு பிறகு அவரது மனைவி அவரின் தாய் வீட்டில் தங்க சென்றுவிட்டார்.

பர்மன் மதுக்கடையில் மது அருந்திவிட்டு தனது கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் உத்லானா மற்றும் ஹட்டா ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நடந்து செல்கையில் சாலையில் உள்ள பெரிய குழியில் விழுந்தார். அந்த குழி இருந்த சாலையை தார் ஊற்றி சமம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த பொறுப்பை கட்டுமான நிறுவனம் ஒன்று ஏற்றிருந்தது.
இந்நிலையில் பர்மன் இருப்பது தெரியாமல் ஊழியர்கள் இருவர் அந்த குழியை அடைத்து தாரை ஊற்றி ரோட் ரோலர் மூலம் ரோட்டை சமம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் புதிதாக சமம் செய்யப்பட்ட தார் சாலையில் ஒரு இடத்தில் மனிதனின் கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தை தோண்டியபோது அடைக்கப்பட்ட குழியில் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications