கைதிகளை தப்ப வைக்க பீகார் கோர்ட்டில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா?
பாட்னா: பீகாரின் அர்ரா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சில கைதிகள் தப்பிச் செல்ல ஏதுவாக நடத்தப்பட்டதா?. குண்டு வெடித்த உடன் ஏற்பட்ட குழப்பத்தின்போது அகிலேஷ், லம்பு என்ற 2 குற்றவாளிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவாளிகளை போலீசார் வேனில் ஏற்றி நீதிமன்றத்திற்கு அழைந்து வந்தனர். வேன் நீதிமன்ற வளாகத்தை அடைந்த உடன் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

குண்டு
குண்டுவெடிப்பில் பலியான பெண் தற்கொலைப்படை தீவிரவாதி அல்ல என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண் சில கைதிகளை தப்ப வைக்க குண்டுகளை வீச தனது உடலில் கட்டி வந்திருக்கலாம். ஆனால் குண்டு ஏதேச்சையாக வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயலா அல்லது கைதிகளில் யாரையாவது குறி வைத்து நடந்த பழிவாங்கும் செயலா என்பதை தெரிந்து கொள்ள விசாரணை நடத்தி வருவதாக ஐ.ஜி. அமரேந்தர் குமார் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள்
அர்ரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. தர்பங்காவில் அண்மையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு கிளை துவக்கியபோது தான் பீகாரில் தீவிரவாதம் தலைவலியாக மாறியது.
இதுவரை நடந்த விசாரணையில் அர்ராவில் இந்தியன் முஜாஹிதீனோ அல்லது வேறு தீவிரவாத அமைப்புகளின் ஆட்களோ இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
ஒபாமா
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வரவிருக்கும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மேலும் பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகாரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் குண்டு வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பீகாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் பலியான பெண் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டு வெடித்ததில் அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications