ரூ.100 கோடி ரோடு போட்டீங்க ஓகே.. ஆனா மரத்தை வெட்ட மறந்துடீங்களே.. வினோதத்தின் உச்சமான பீகார் சாலை
பாட்னா: பீகார் மாநிலத்தில் ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஒரு சாலையை விரிவாக்கம் செய்துள்ளனர். எல்லாமே பக்காவாக இருக்கத் திட்டமிட்டு ரோடு போட்டுள்ளனர். ஆனால், அதில் ஒரே ஒரு சிக்கல். அதாவது ரோடு போட்ட இவர்கள் நடுவில் இருந்த மரங்களை வெட்ட மறந்துவிட்டனர். இதனால் படத்தில் வருவது போல மரங்களுக்கு நடுவே புகுந்து புகுந்து செல்ல வேண்டி இருக்கிறது.
ஒரு பெரிய புதிதாகப் போடப்பட்ட, குண்டு குழிகள் எதுவும் இல்லாத ஒரு சாலையில் இரு பக்கமும் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும்.. அந்தச் சாலைகளில் செல்லவே நமக்கு அவ்வளவு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். அந்தச் சாலையில் வேகமாகச் செல்லும்போது, புத்துணர்ச்சியூட்டும் காற்றும், இயற்கைக் காட்சிகளும் இனிமையான பயணத்தை நமக்குத் தரும்.

ஒரு சின்ன தவறு
பீகாரில் கிட்டதட்ட அதுபோல தான் ஒரு சாலையைப் போட்டுள்ளனர். ஆனால், வழக்கம் போல அங்கு ஒரே ஒரு சின்ன தவறு செய்துவிட்டனர். ரோடு போடுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது என நீங்கள் கேட்கலாம்.. ஆனால், இந்தத் தவறு நீங்கள் நினைப்பதை எல்லாம் விட மோசம். அவர்கள் ரோட்டை போட்டார்கள் சரி, ஆனால், நடுவில் இருந்த மரத்தை வெட்டாமல் விட்டுவிட்டனர். இதனால் புதிதாகப் போடப்பட்ட சாலையின் நடுவே ஏகப்பட்ட மரங்கள் உள்ளன.
சாலைக்கு நடுவில் மரங்கள்
ஆம் சாலையோரம் இல்லை.. சாலைக்கு நடுவிலேயே ஏகப்பட்ட மரங்கள் உள்ளன. வீடியோ கேமில் இதுபோல சாலைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு நிஜமாகவே அப்படியொரு சாலையை அமைத்துள்ளனர். இந்த ரோட்டில் போகும் போது நீங்கள் மரங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் உயிரிழப்புகளே கூட ஏற்படலாம். பீகாரின் ஜெஹானாபாத்தில் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட சாலையில் தான் இப்படி காமெடி செய்துள்ளனர்.
ஜெஹானாபாத்தில் பாட்னா-கயா இடையேயான 7.48 கி.மீ நீளமுள்ள பிரதான சாலையில் நடுவே மரங்கள் அப்படியே நிற்கின்றன. இதனால் சாலையில் பயணிப்பவர்கள் விபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.
என்ன நடந்தது
மாவட்ட நிர்வாகம் 100 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டபோது, மரங்களை அகற்ற அனுமதி கேட்டு வனத்துறையை அணுகி இருக்கிறது. ஆனால் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுக்காமல், அந்தக் கோரிக்கை நிராகரித்துவிட்டது.. அதாவது மரங்களை வெட்ட அனுமதி வேண்டும் என்றால் அதற்குப் பதிலாக 14 ஹெக்டேர் நிலத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டிருக்கிறது.. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
மக்கள் புலம்பல்
இதன் காரணமாகவே இப்படியொரு வினோதமான முடிவை எடுத்துள்ளனர்.. மரங்களைச் சுற்றி சாலையை அமைத்து இருக்கிறார்கள். அந்த மரங்களும் கூட ஒரே நேர்கோட்டில் இல்லை. இதனால் வேகமாகச் செல்லும் ஓட்டுநர்களால் மரத்தைத் தவிர்க்கவே முடியவில்லை.. இதனால் மரங்களுக்கு இடையே மாறி மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. இது 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலையைப் போல இல்லை.. மாறாக மரணத்திற்கான அழைப்பிதழ் போல் உள்ளது.
சாலையின் நடுவே மரங்கள் இருப்பதால் ஏற்கனவே நிறைய விபத்துகள் நடந்துள்ளன என்று அவ்வழியாகச் சென்ற ஒருவர் கூறினார். ஆனால் மாவட்ட நிர்வாகம் மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications