பாஜகவுக்கு தேர்தல் 'மூடு' ... தயாராகும் இருவர் அணி.. களை கட்டப் போகும் விளம்பரங்கள்!
டெல்லி: நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளதால், பாஜக தேர்தல் மன நிலைக்கு வந்து விட்டது. இதைத் தொடர்ந்து தனது வெற்றிகரமான விளம்பர பார்ட்னர்களான பியூஷ் பாண்டே மற்றும் சாம் பல்சராவுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
கட்சியின் தேர்தல் பிரசாரப் பணிகளை இவர்கள்தான் கவனிக்கப் போகிறார்கள். பிரசார வாசகங்கள் , விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை இவர்கள்தான் வடிவமைக்கப் போகிறார்கள்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தையும், விளம்பரங்களையும் இந்த இருவர் அணிதான் சிறப்பாக செய்து கொடுத்தது என்பது நினைவிருக்கலாம். எனவே இவர்களின் சேவையை மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலுக்கும் பாஜக பயன்படுத்தவுள்ளது.

"தேசிய கீதம்" இயற்ற வருவாரா பிரசூன் ஜோஷி
அதேசமயம், கட்சியின் தேர்தல் முழக்கமான செளகந்த் பாடலை இயற்றியவரான பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, இந்த சட்டசபைத் தேர்தலுக்கும் பணியாற்ற வருவாரா என்பது தெரியவில்லை.

வேலையில் இறங்கிய அமித் ஷா
பாஜக தலைவர் அமித் ஷா, தேர்தல் விளம்பரம், பிரசார வாசகம் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்கனவே பாண்டே மற்றும் பல்சராவுடன் ஆலோசனையில் இறங்கி விட்டார். தங்களுக்கு என்ன தேவை என்பதையும் அவர், அவர்களிடம் சொல்லி விட்டதாக தெரிகிறது.

பியூஷ் கோயல்தான் கிரியேட்டிவ் டைரக்டர்
பாஜகவின் சட்டசபை பிரசார, விளம்பர பிராஜெக்ட்டுக்கான கிரியேட்டிவ் இயக்குநராக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டனிலிருந்து வரும் லாத்வா
அதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் லாத்வாவும் இந்தப் பணியில் இணைகிரார். இதற்காக அவரும் லண்டனிலிருந்து வந்துள்ளார்.

ஓ அன்ட் எம் இயக்குநர் பாண்டே
பாண்டே, பிரபல ஓகில்வி - மாத்தர் நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குநர் ஆவார். தான் பாஜகவின் சட்டசபை விளம்பர, பிரசாரப் பணிகளை வடிவமைக்கவுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்
இந்த தேர்தல் பிரசார வடிவமைப்பில் உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவுள்ளதாம். இதுதொடர்பான தகவல்களை அந்தந்த மாநிலங்களிலேயே திரட்டவுள்ளனர்.

அச்சி தின்.. அதாவது நல்ல நாள்...
மோடி சொன்ன அச்சி தின். அதாவது நல்ல நாள் வரும் என்ற வாசகத்தை முக்கியத்துவம் கொடுத்து பில்டப் செய்யப் போகிறார்களாம். அது போக உள்ளூர் பிரச்சினைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்குமாம்.

அச்சி தின் ஆனே வாலே ஹெய்ன்
இந்த இருவர் அணிதான் அச்சி தின் ஆனே வாலே ஹெய்ன்.. அதாவது நல்ல நாள் வரப் போகுது என்ற வாசகத்தையும், ஜந்தா மாப் நஹி கரேகி என்ற வாசகத்தையும், அதாவது மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. என்பதையும் உருவாக்கி லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிரபலப்படுத்தியவர்கள் ஆவர்.
அதை விட முக்கியம் ஆப் கி பார்.. மோடி சர்க்கார்!
இந்த இரண்டையும் விட முக்கியமானது ஆப் கி பார் மோடி சர்க்கார் என்ற வாசகம்தான். அதையும் கூட இந்த இருவர் அணிதான் உருவாக்கியது.


Click it and Unblock the Notifications
