மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம்.. உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல்!
பாஜக எம்எல்ஏ ராம்கதம் உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: பாஜக எம்எல்ஏ ராம்கதம் உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏக்கள் அவ்வப்போது சர்ச்சை பேச்சுக்களை பேசி பிரச்சனையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப், உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங், கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டில், ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் இப்படி சர்ச்சை பேச்சுக்களை பேசியவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் மும்பையை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதம்.

உறியடி விழாவில் சர்ச்சைபேச்சு
காட்கோபரில் கடந்த 3ஆம் தேதி பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் கதம் கூட்டத்தில் இருந்த இளைஞர்களை பார்த்து
உங்கள் காதலுக்கு நான் நூறு சதவீதம் உதவி செய்வேன்.

கடத்தி வந்து கொடுக்கிறேன்
நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.

எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகை சோனாலி பிந்த்ரே
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் எம்எல்ஏ ராம்கதம். இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோனாலி பிந்த்ரே மறைவு?
இந்நிலையில் ராம் கதம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், "இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
|
தவறான தகவல் - மன்னிப்பு
பின்னர் சோனாலி பிந்த்ரே மறைவு குறித்து பரவிய செய்தி வதந்தி என அவர் பதிவிட்டு மன்னிப்பு கோரினார் எம்எல்ஏ ராம்கதம். மேலும் அவர் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

முகம் சுளிக்க வைத்துள்ளது
நடிகை சோனாலி பிந்த்ரே உயிருடன் உள்ள நிலையில் அவர் இறந்துவிட்டதாக எம்எல்ஏ ராம்கதம் டிவிட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது முகம் சுளிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
