சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த பாஜக எம்எல்ஏ.. விவாதிக்ககோரிய எதிர்க்கட்சியினர் அமளி.. 5 பேர் சஸ்பெண்ட்
அகர்தாலா: திரிபுரா சட்டசபையில் பாஜக எம்எல்ஏ ஜபாத் லால் நாத் ஆபாசபடம் பார்த்ததாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதுபற்றி விவாதிக்க கூறிய 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மாணிக் சாகா உள்ளார். இங்குள்ள பாக்பாசா சட்டசபை தொகுதி எம்எல்ஏவான ஜாதவ் லால் நாத் இருக்கிறார். இவரும் பாஜகவை சேர்ந்தவர்.

இந்நிலையில் தான் சட்டசபையில் வைத்து பாஜக எம்எல்ஏவான ஜாதவ் லால் நாத் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையையும் உருவாக்கியது.
அதாவது கடந்த மார்ச் மாதம் திரிபுராவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இதில் எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் பங்கேற்றார். சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது ஜாதவ் லால் நாத் தனது செல்போனில் ஆபாசபடம் பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது.
இதையடுத்து பலரும் ஜாதவ் லால் நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சி சார்பில் மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜாதவ் லால் நாத் தரப்பில், ஆபாசபடம் எதுவும் பார்க்கவில்லை. செல்போனில் ஸ்க்ரோல் செய்தபோது அப்படியான காட்சி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று திரிபுராவில் சட்டசபை கூட்டம் நடந்தது. சபாநாயகர் பிஸ்வாபந்த் சென் தலைமையில் சபை கூடியது. இந்த வேளையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கோஷமிட்டனர். சட்டசபையில் பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் ஆபாசபடம் பார்த்தது பற்றி விவாதிக்க வேண்டும் என ஒருசேர குரல் எழுப்பினர். ஆனால் சபாநாயகர் விவாதிக்க முன்வரவில்லை.
இதனால் கோபமடைந்த எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத்துக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது ஒருவர் மேஜையின் மேல் ஏறி கோஷமிட்டனர். அதோடு பலரும் டேபிளை தட்டி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் தான் 5 எம்எல்ஏக்கள் அதிரடியாக சபையில் இருந்து ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக கூறி அந்த 5 எம்எல்ஏக்கள் மீதும் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சபாநாயகர் பிஸ்வாபந்த் சென் பிறப்பித்துள்ளார்.
அதன்படி மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நயன் சர்கார், காங்கிரஸ் கட்சியின் சுதீப் ராய் பர்மான், திப்ரா மோதா கட்சியை சேர்ந்த பிரிஸ்வாக்கீட்டு டெப்பர்மா, நந்திதா ரியாங், ரஞ்சித் டெப்பர்மா 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 5 பேரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications