சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை.. பூமராங் ஆகும் பாஜகவின் ஆக்ஷன்கள்!
Recommended Video

சென்னை: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஆங்காங்கே சேர்ந்து கொண்டிருந்த எதிரிக்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் சேர்த்து வைத்து தனக்குத் தானே குழி வெட்டிக் கொண்டுள்ளது பாஜக.
மேற்கு வங்க மாநிலத்தில் அந்த மாநிலத்தின் முதல்வரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேற்கு வங்க காவல்துறைக்கும் சி பி ஐ -க்குமான இந்தப் போராட்டம் இப்போது மம்தாவுக்கும் மத்திய அரசுக்குமான போராட்டமாக மாறியுள்ளது.
சி பி ஐ - அமைப்பை வைத்து மத்திய அரசு மாநிலங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறது. அதற்காக அவ்வப்போது ரெயிட் படலங்களும் அரங்கேற்றப் படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது போன்ற ஒரு நடவடிக்கை மூலம் மேற்குவங்கத்திலும் தனது ஆட்டத்தை தொடங்கியது பாஜக. கொல்கொத்தா மாநகர காவல்துறை ஆணையாளாரக இருக்கும் ராஜீவ் குமார், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடியை சரியாக விசாரிக்கவில்லை என்றும், அந்த வழக்கை நீர்த்துப் போக செய்தார் என்றும் கூறி அவரை விசாரிக்க சி பி ஐ அவருக்கு சம்மன் அனுப்பியது,

காவல்துறை - சிபிஐ மோதல்
ஆனாலும் ஆஜராகாத ராஜீவ் குமாரை விசாரிக்க சி பி ஐ அதிகாரிகள் சென்றபோது மாநில காவல்துறைக்கும் சி பி ஐ- க்கும் மோதல் உருவானது. இந்த மோதல் காரணமாக தனது மாநில காவல்துறைக்கு ஆதரவாக களம் இறங்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா தான் இறப்பதற்கும் தயார் என்றும்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தேசத்தையும் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க தனது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

தலைவர்கள் திரண்டனர்
அவரது இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மாநிலங்களைவை உறுப்பினர் கனிமொழி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத், உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, குஜராத் சட்டப் பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் , மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடா மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேவா கட்சியின் ராஜ் தாக்கரே உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவளித்துள்ளனர். அதோடு அவருக்கு நேரில் ஆதரவளிக்கவும் மம்தாவுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளவும் கேஜ்ரிவால், கனிமொழி உள்ளிட்டவர்கள் கொல்கத்தாவுக்கு விரைந்துள்ளனர்.

வலுக்கம் எதிர்ப்பு
பாஜக மம்தாவை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு செய்யும் செயல்களால் இன்னொரு பக்கத்தில் சி பி ஐ - மீதான வலிமையான எதிர்ப்பை மேலும் வலுவடையச் செய்யும். ஏற்கனவே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த வருடம் நவம்பர் மாதம் சி பி ஐ அமைப்புக்கான பொது அனுமதியை ரத்து செய்தார். இதற்கு முன்னதாக கர்நாடகாவிலும் 1998 - ம் ஆண்டு இது போன்ற தடை சி பி ஐ க்கு ஏற்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு நீடித்தது. இது போலவே சட்டீஸ்கர், சிக்கிம், நாகலாந்து போன்ற மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது சி பி ஐ - தலைமை மீது ஊழல் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசே அதன் இயக்குனர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதை தொடர்ந்து இப்போது தலைமை மாற்றப்பட்டுள்ளது.

தேவையில்லாத கெட்ட பெயர்
இப்படி சி பி ஐ மீதான நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசும் தனக்கு எதிரான மாநில கட்சிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க சி பி ஐ- யை தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றசாட்டு பரவலாக கூறப்பட்டு வரும் வேளையில் இனிமேல் பல மாநிலங்களில் சிபிஐக்கான தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏராளாமாக உள்ளது. ஆக பாஜக சிபிஐ மூலமாக மாநில அரசுகளை வழிக்கு கொண்டு வர எடுத்த நடவடிக்கை பூமராங் ஆனதோடு சி பி ஐ மீதான நம்பிக்கையையும் தகர்த்து எறிவதோடு பல மாநிலங்களில் இனிமேல் சிபிஐக்கு தடை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியுள்ளது என்பதே எதார்த்தம்.

ஒற்றுமைக்கான பேரணி
கடந்த மாதம் 19- ம் தேதி ஒற்றுமைக்கான பேரணி என்று பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து மாநாடும், மிகப்பெரிய பேரணியும் நடத்தினார் மம்தா. இந்தப் பேரணியில் இந்தியா முழுமையிலும் இருந்து 18 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பாஜக அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியும் மாநாடும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைப்பதற்காகவே மம்தா ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் தற்போது மம்தா ஏற்பாடு செய்யாமலேயே பாஜகவின் புண்ணியத்தில் எதிக்கட்சிகள் மீண்டும் அதிக வலிமையுடன் ஒன்றிணையும் வாய்ப்பை பாஜகவே ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications