மகாராஷ்டிராவில் பாஜக படைத்தது சாதா சாதனை அல்ல.. வரலாற்றுச் சாதனை!
மகாராஷ்டிராவில் முதல் பாஜக முதல்வர் பதவியேற்றபோது அங்கு வரலாறு படைக்கப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக மட்டுமல்லாமல், முதல் இளம் முதல்வராகவும் பதவியேற்று வரலாறு படைத்தார். இங்கு பாஜகவுக்கு கிடைத்தது மற்றும் ஒரு வெற்றி என்று கூறி விட முடியாத அளவுக்கு அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன.
உண்மையில் சாதித்தது என்ன?
முதலில் இந்த மாநிலத் தேர்தலில் பாஜக தனது தகுதியையும், திறமையயைும் நிரூபித்தது. மக்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பதை நிரூபித்தது. சிவசேனாவின் அடிமை தாங்கள் இல்லை என்பதை மக்கள் மூலமாகவே நிரூபித்தது பாஜக. மாநிலத்திலேயே பெரிய கட்சியாகவும் அது தன்னை உயர்த்திக் காட்டியது.

சிவசேனாவின் கோட்டைக்குள் புகுந்து இப்படி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது சாதாரண விஷயமில்லை. சிவசேனா, பாஜகவுக்குக் கொடுக்க நினைத்த சீட்டுகளை விட அதிக அளவில் வென்றதும் சாதாரண விஷயம் இல்லை.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அதே சிவசேனா பட்னாவிஸ் பதவியேற்புக்கு வந்து சேர்ந்து கொண்டது. பிரதமர் மோடியை, உத்தவ் தாக்கரே தேடி வந்து மேடையில் பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தாலும் கூட சிவசேனாவை தாங்கள் உதாசீனப்படுத்த விரும்பவில்லை என்பதையும் பாஜக காட்டியது. மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைக்க அது சிவசேனாவையே அதிகம் நம்புகிறது.

ஒருவேளை நாளை காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்தால், மீண்டும் சிவசேனாவுடன் பாஜக கை கோர்ப்பது அவசியமாகும். அதை இரு கட்சிகளுமே உணர்ந்துள்ளன.
குஜராத் - மகாராஷ்டிராவின் முக்கியத்துவம்
மகாராஷ்டிராவில் தனது முதல்வரை வைத்திருப்பபது அரசியல் ரீதியாக மட்டுமல்ல முதலீட்டு நோக்கத்திற்கும் கூட பாஜகவுக்கு நல்ல விஷயம், முக்கியமானதும் கூட. மகாராஷ்டிராவும், குஜராத்தும் பாஜகவிடம் இருக்கும் நிலையில் அகமதாபாத் - மும்பை காரிடார் திட்டத்தை சுலபமாக நிறைவேற்ற வழி பிறந்துள்ளது. மேலும் மோடிக்கும் இது தலைவலை இல்லாத வேலையாக மாறியுள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு குஜராத்திலும் முதலீடுகள், கிளைகள் உள்ளன. இவற்றுக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். மகாராஷ்டிராவில் குஜராத்தி வர்த்தகர்கள் நிறையவே உள்ளனர். இதன் மூலம் இரு மாநிலமும் பெரும் பலன்களைச் சந்திக்க முடியும்.
இரு மாநில அரசியல் பகைகளையும் உடைத்தெறிய முடியும். இரு மாநில வர்த்தக உறவுகளையும் பெருக்கி வலுவாக்க முடியும். இதெல்லாம் பாஜகவுக்குக் கிடைத்துள்ள பலன்கள் மட்டுமல்ல, வர்த்தக துறைக்கும், இரு மாநில மக்களுக்கும் கூட பலன்கள்தான்.
தெளிவான தீர்ப்பு
மகாராஷ்டிராவில் மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு தெளிவானதாகும். மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்பு பாஜக எடுத்த தைரியமான, துணிச்சலான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மேலும் சிறுபான்மை அரசை அமைக்கக் கூட பாஜக தயங்காது என்பதையும் அது காட்டியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலுக்குத் தான் பணிய மாட்டேன் என்பதையும் அது காட்டி விட்டது.
இந்த வெற்றியின் மூலம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கும் பாஜக சரியான தகவலை தெரிவித்துள்ளது. இது மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் கூட சொல்லப்பட்ட தகவலாகவே கருதப்பட வேண்டும்.
மோடி முன்பு அடுத்து என்ன?
மகாராஷ்டிரா, ஹரியானாவில் அரசு அமைத்தாகி விட்டது. இதன் மூலம் மோடி தனது நிர்வாகத் திறமையை, அரசியல் சாணக்கியத்தனத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். அடுத்து சில முக்கிய பொருளாதார முடிவுகளை அவர் கவனத்தில் கொள்ளவுள்ளார். பொருளாதார சூழல்கள் சில சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் கூட அதில் கவனமாக இருப்பது அவசியமாக உள்ளது.

பணவீக்கம் சற்று கட்டுப்பாட்டில் இருப்பது போல உள்ளது. எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. அதேசமயம், சில கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மோடி எடுத்தால் அது நிச்சயம் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஜார்க்கண்ட - ஜம்மு காஷ்மீர்
அடுத்து ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்குத் தேர்தல் வரவுள்ளது. இது நிச்சயம் பாஜகவுக்கு சவாலான களம்தான். குறிப்பாக ஜம்மு காஷ்மீர். மோடி மந்திரத்தை இங்கும் அவர்கள் செல்லுபடியாகும் என நிரூபிக்க வேண்டியுள்ளது.
இங்கு பல கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தல்களின்போது மோடியால் அதிக நேரத்தை இங்கு செலவிட முடியுமா என்பது தெரியவில்லை. அதேசமயம், இரு மாநிலங்களிலும் பாஜக வெல்ல வேண்டியது மோடிக்கு முக்கியமானதாகும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ரீதியாக அங்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஆனால் இங்கு மோடி அலை பெரும் சாதகத்தையே கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. அதேசமயம், பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் நிச்சயம் பெரும் சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருவேளை ஜம்மு காஷ்மீரில் அது பெரும் வெற்றியைப் பெற்றால் அது மிகப் பெரிய மாயாஜாலமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கிட்டத்தட்ட பூஜ்யமாகிப் போய் விடும்.












Click it and Unblock the Notifications