கருப்புப் பண முதலைகளுக்கு எதிரான வேட்டை .. 60 பேர் மீது முதல் கட்ட நடவடிக்கை!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 60 இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் 1195 பேருக்கு கணக்கு உள்ளதாகவும், மொத்தம் 25 ஆயிரத்து 420 கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தக் கணக்குகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள 1195 வங்கி கணக்குகளில் 350 கணக்குகள் ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. இவற்றில் 60 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கணக்குகள் மார்ச் 31ம் தேதிக்குள் ஆய்வுக்குட்படுத்தப்படும்.
தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிபரம், 5 ஆண்டுகளுக்கு முந்தைய விபரங்கள். அவை புதியவை அல்ல என்றும் ஜேட்லி விளக்கியுள்ளார்.
இந்த 60 பேரில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்பானவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 60 பேர் மீதும் முதல் கட்டமாக வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை மட்டுமே நடந்துள்ளதாம். இவர்கள் மீது இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களை படி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னரே தனிபட்ட விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 627 பேரின் பட்டியல் மத்திய அரசால் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலிருந்து மூன்று பேர் பெயர்கள் மட்டுமே பகிரங்கமாக வெளியிடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications