லோக்சபாவில் ஒரே நாளில் 510 எம்பிக்கள் பதவி ஏற்று புதிய சாதனை
டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வது லோக்சபாவில் நேற்று ஒரே நாளில் 510 எம்பிக்கள் பதவி ஏற்றிருப்பதன் மூலம் நாடாளுமன்ற வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 7 தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் கடந்த மே 16ம் தேதி வெளியாயின. இரண்டு நாட்கள் கழித்து மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான புதிய உறுப்பினர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.
புதிய லோக்சபாவின் முதல் கூட்டம் கடந்த 4ந் தேதி தொடங்கியது. முன்னதாக, ஜனாதிபதி மாளிகையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கமல்நாத் தற்காலிக சபாநாயகராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
கடந்த 3ந் தேதி மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே டெல்லியில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு லோக்சபாவின் முதல் நாள் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து நாள் முழுக்க அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி எம்.பியாக பதவியேற்பு
இதனால் அன்றயை தினம் எம்பிக்கள் யாரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் லோக்சபா நேற்று காலை கூடியது. முதல் நபராக பிரதமர் நரேந்திரமோடி எம்பியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஒரே நாளில் 510 பேர்..
அவரை தொடர்ந்து அத்வானி, சோனியா, மத்திய அமைச்சர்கள் என வரிசையாக மொத்தம் 510 எம்பிக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

புதிய சாதனை
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு இத்தனை எம்பிக்கள் ஒரே நாளில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டது இல்லை என லோக்சபா செயலர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

4 காலி இடங்கள்
லோக்சபா தேர்தலில் மோடி மற்றும் முலாயங்சிங் ஆகியோர் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதில் மோடி வதோதரா தொகுதியையும், முலாயம்சிங் மெயின்பூரி தொகுதியையும் விட்டுக் கொடுத்தனர். எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மேடக் தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவால், பீட் தொகுதி உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

539 எம்.பிக்கள்
எனவே லோக்சபாவில் தற்போது 539 உறுப்பினர்களே உள்ளனர். இவர்களில் 510 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். எஞ்சியுள்ள 29 பேர் இன்று பதவி ஏற்றனர்.
|
தாய்மொழியில் பதவியேற்பு
மேலும் லோக்சபாவில் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது தாய்மொழியில் பதவியேற்றனர். ஹிந்தியில் 192, ஆங்கிலத்தில் 110, மராத்தியில் 38, சமஸ்கிருதத்தில் 35, கன்னடத்தில் 27, தெலுங்கு மொழியில் 13, மலையாளத்தில் 5 பேர் பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழில் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications