இண்டர்நெட்டை துண்டித்த தாயை கத்தியால் குத்த முயன்ற 15 வயது சிறுவன்!
புனே: கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டதற்காகவும், ஸ்மார்ட் போனை பறித்துக் கொண்டதற்காகவும் 15 வயதான பள்ளி மாணவன் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் புனே நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேயை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவனுக்கு அவனது பெற்றோர்கள் 7ம் வகுப்பு படிக்கும்போது ஒரு செல்போனை வாங்கி கொடுத்தனர். அதில் இருந்து போனுடனே பொழுது போக்க ஆரம்பித்தான் சிறுவன். 9ம் வகுப்பு படிக்கும் நிலையில் தற்போது அவனது கையில் இருப்பது ஸ்மார்ட் போன்.

பொங்கலுக்கே பட்டாசு கொழுத்துபவன், தீபாவளி வந்தால் சும்மா இருப்பானா. ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது சாட்டிங்கே கதி என்று ஆரம்பித்துவிட்டான். வாட்ஸ்அப், வீசாட், வைபர் என அனைத்து சாட்டிங் செயலியிலும் இவர் கைவண்ணம்தான்.
இதனால் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவது கிடையாது, படிப்பது இல்லை. அவ்வளவு ஏன் அம்மா, அப்பாவிடம் கூட பேசாமல் ரூமிலேயே போனும் கையுமாக இருந்துள்ளான். சில நேரங்களில் விடிய விடிய சாட்டிங்கிலேயே இருந்ததை சிறுவனின் தாய் பார்த்து வேதனை அடைந்துள்ளார். மகனுக்கு செல்போன் வாங்கி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்த சிறுவனின் தாய், சம்பவத்தன்று ஸ்மார்ட் போனை பறித்துக் கொண்டார்.
இதனால் கோபமடைந்த சிறுவன், கம்ப்யூட்டரில் அமர்ந்தபடி சாட் செய்ய ஆரம்பித்துவிட்டான். கடுப்பான தாயார், கம்ப்யூட்டரை ஆப் செய்துள்ளார். இதனால் இணையம் இல்லாமல் வெறுப்படைந்த சிறுவன், கத்தியை எடுத்து வந்து தாயை குத்த முயன்றான். எப்படியோ தாயார் தப்பியோடியதுடன் சிறுவனை பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறுவனின் எதிர்காலம் கருதி மருத்துவர்கள் அவனின் பெயர் மற்றும் பெற்றோரின் பெயரை வெளியிட வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். கஞ்சா, மது போல இணையதளமும் ஒரு போதையாக மாறிவிட்டதாக உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்மார்ட் போனில் இணையத்தை பயன்படுத்தாமல் வாரத்திற்கு சில நாட்கள் பிரேக் விடுவதன் மூலம், உளவியல் பாதிப்பில் இருந்து வெளிவர முடியும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications