நெஞ்சே பதறுதே.. இளம்பெண்ணை எட்டி மிதித்து கொடூரமாக தாக்கிய ஆண் நண்பர்..பதைபதைக்க வைத்த வீடியோ
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் ஒருவரை அப்பெண்ணின் ஆண் நண்பர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது. நெஞ்சை உறைய வைக்கும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கலால் எட்டி உதைத்து தாக்கும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பதை பதைக்க வைத்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி நிலைகுலைய வைத்த ஆண் நண்பரையும் இந்தக் காட்சிகளை படம் பிடித்த இளைஞரையும் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருமணத்துக்கு இளம்பெண் மறுப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் ரேவா மாவட்டத்தில் உள்ள மவுகஞ்ச் என்ற சிறிய நகரை ஒட்டியுள்ள கிராமம் தேரா. இந்த கிராமத்தை சேர்ந்த பன்கஞ் (வயது 24) என்பவர் தனது ஊருக்கு அருகில் உள்ள 19 வயதான இளம் பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பன்கஞ் சொல்லியதாக தெரிகிறது. ஆனால், வீட்டில் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இளம்பெண் மறுத்துள்ளார்.

நெஞ்சை பதற வைக்கும் வகையில்..
இதனால், ஆத்திரம் அடைந்த பன்கஞ், அந்த இளம்பெண்ணை தலையை பிடித்து இழுத்து கீழே போட்டு காலால் எட்டி உதைத்து மிகக் கொடூரமாக தாக்குகிறார். பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இந்தக் காட்சிகள் உள்ளன. இந்த கொலை வெறி தாக்குதலில் நிலைகுலைந்த அந்தப் பெண் நினைவின்றி மயங்கி விழுகிறார். இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்த நபரிடம் அதை அழிக்குமாறு பன்கஞ் சொல்வதும் பதிவாகியுள்ளது. மயங்கிய நிலையில், அந்த இளம்பெண்னை இருவரும் போட்டுவிட்டு அப்படியே சென்றுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் கைது
அப்பகுதி மக்கள் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பன்கஞ் தலைமறைவு ஆனார். உத்தர பிரதேசத்தின் மிரசார்பூர் மாவடத்தில் வைத்து பன்கஞ்சை போலீசார் கைது செய்தனர்.

கொடூரமாக தாக்கியிருக்கிறார்
வீடியோவை பதிவு செய்தவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை முயற்சி தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேவா மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறியதாவது:- அந்த இளம்பெண்ணுக்கும் கைதான பன்கஞ் திரிபாதிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியிருக்கிறார்.

இணையத்தில் வீடியோ பரவியதை அடுத்து..
அப்பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர். இதையடுத்து இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். பெண்ணின் தாய் எந்த நடவடிக்கையும் எடுக்க வற்புறுத்தவில்லை. இணையதளத்தில் வீடியோ பரவியதை வைத்து நாங்கள் நடவடிக்கையை தொடர்ந்துள்ளோம். பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பரப்பிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். எனவே அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications