பர்த்வான் குண்டு வெடிப்பு: மியான்மரைச் சேர்ந்த தீவிரவாதி ஹைதராபாத்தில் கைது
ஹைதராபாத்: மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி காலித் கைது செய்யப்பட்டுள்ளான்.
பர்த்வானில் வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத இயக்கத்தினருக்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அப்போது குண்டுகள் வெடித்ததில் இருவர் உயிரிழநதனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வெடிகுண்டு குவியல்களை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த மியான்மரைச் சேர்ந்த 28 வயது தீவிரவாதி காலித்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று கைது செய்தனர்.
தற்போது பிடிபட்டுள்ள காலித், வங்கதேசத்தில் உள்ள தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புள்ளவர்; மியான்மரில் செயல்படும் ரோங்கியா முஸ்லிம் ஆதரவு அமைப்பின் உறுப்பினர் என்றும் வெடிகுண்டுகளை இயக்குவதற்கு காலித் பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
காலித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், வங்கதேசம் - மியான்மர் எல்லையில் தீவிரவாத முகாம்களை தாம் இயக்கி வந்ததாகவும் கூறியுள்ளான். காலித்திடம் இருந்து ஆயுத பயிற்சி எடுப்பது தொடர்பான வீடியோக்கள், வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான புத்தகங்கள், ஈராக்-சிரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கதினரின் பிரசுரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பாகிஸ்தானில் தெஹ்ரீக்- இ- ஆசாதி அரகான், தெஹ்ரீக் இ தலிபான் ஆகிய பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களிடம் தாம் பயிற்சி பெற்றதையும் காலித் ஒப்புக் கொண்டதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications