மீண்டும் ஜனாதிபதிக்கு உத்தரவிடனுமா? ஏற்கனவே 'பஞ்சாயத்து'..இது வேறயா? மே.வங்க வழக்கில் உச்சநீதிமன்றம்
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் ஜனாதிபதிக்கு உத்தரவிட வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் வன்முறைகள் வெடித்துள்ளன. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மதமோதல்களாக இந்த வன்முறைகள் உருமாறின. இதனால் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறும் அவல நிலை ஏற்பட்டது.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் திட்டமிட்டு மத வன்முறைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படையினரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது, அரசு நிர்வாகத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் இப்போது முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு மீண்டும் உத்தரவிட வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழக்கில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ஜனாதிபதி குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. ஆனால், ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் எப்படி உத்தரவிடலாம் என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்றமே சட்ட விவகாரங்களில் முடிவு செய்துவிட்டால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாமே? நாட்டின் மத மோதல்களுக்கு காரணமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் என விமர்சித்திருந்தார். இதனையே இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications