அதிவேகத்தில் பறக்கலாம்.. எலக்ட்ரிக் கேபிள் ஹைவே.. முதல் முறையாக இந்தியாவில்.. நிதின் கட்கரி தகவல்!
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு வெறும் 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையிலான அதிவேக தொழில்நுட்ப திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் மின்சார போக்குவரத்து சாலை டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை அமைய உள்ளது. இந்த சாலையானது, டெல்லி - மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக அமைகிறது. டெல்லி - ஜெய்ப்பூர் 5 வழிச் சாலையின் முதல் பகுதியை, பிரதமர் மோடி ஜெய்ப்பூரில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். தற்போது டெல்லியிலில் இருந்து ஜெய்பூர் வரையிலான இந்த சாலையை மும்பை வரை நீட்டிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இ-நெடுஞ்சாலை: இந்த 5 வழிப்பாதையில் ஒரு வழியை, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை, மின்சார சாலையாக அமைக்கிகத் திட்டமிட்டுள்ளது. இந்த சாலையில் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரத்தின் உதவியால் வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்களுக்கான போக்குவரத்தும், கனரக வாகனங்களும் இயங்க உள்ளன.
இந்தச் சாலையில் செல்லும் பேருந்துகள், மின்சார ரயில்கள் இயங்குவது போல மின்சார கேபிள்கள் மூலமாக இயங்கும். இதன் மூலம், அதிக அளவிலான நேரமும், பெட்ரோல் மற்றும் டீசல் செலவும் சேமிக்கப்படும். அதிநவீன தொழில்நுட்பம் இந்த போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதின் கட்கரி பேச்சு: இந்நிலையில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை ஆதரித்து ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜெய்ப்பூர் - டெல்லி எலக்ட்ரிக் ஹைவே திட்டம் பற்றிப் பேசியுள்ளார்.

நிதின் கட்கரி பேசுகையில், "ஜெய்ப்பூர்-டெல்லி இடையே மின்சார கேபிள் நெடுஞ்சாலையை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம், நீங்கள் பிசினஸ் கிளாஸில் அமர்ந்து இரண்டு மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லியை அடையலாம். அதே நேரத்தில், அதன் கட்டணம் டீசல் பஸ்ஸை விட 30 சதவீதம் குறைவாக இருக்கும்.
டெல்லியிலிருந்து மீரட்டுக்கு வெறும் 45 நிமிடங்களில் பயணிக்கலாம் என்று நாங்கள் சொன்னபோது, பத்திரிகையாளர்கள் சிரித்தனர். இன்று, மீரட்டில் இருந்து டெல்லிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வருவதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். ஜெய்ப்பூர் மக்களை டெல்லியின் ஐஸ்கிரீம் சாப்பிடவும், டெல்லி மக்களை ஜெய்ப்பூர் கச்சோரி சாப்பிடவும் அழைத்து வர விரும்புகிறேன். நாட்டு மக்கள் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை வழங்கியதால் இது சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார்.
ஜெர்மனியில்: எலக்ட்ரிக் ஹைவே தொழில்நுட்பம் ஜெர்மனி நாட்டில் 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாட்டில் வாகனங்களுக்கான மின்சார நெடுஞ்சாலைகள் உள்ளன. பயணத்தின் போது ஹைப்ரிட் டிரக்குகளை ரீசார்ஜ் செய்ய ஜெர்மனி தனது மோட்டார் பாதை அமைப்பில் முதல் மின்சார நெடுஞ்சாலையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications