தேசியக்கொடி அவமதிப்பு: மல்லிகா ஷெராவத் மீது வழக்குப் பதிவு
ஹைதராபாத்: தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் அதனை ஆடையாக உடுத்தியதாக பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது ஹைதராபாத் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டர்ட்டி பாலிட்டிக்ஸ்' என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர். நாடு முழுவதும் வெளியிடப்பட்டன.
அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் விளக்குடன் கூடிய ஒரு காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி பலரை திடுக்கிடவும், திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

பொதுநல வழக்கு
இதையடுத்து சமூக சேவகர் தனகோபால் ராவ் என்பவர் தேசிய கொடி அவமதிப்பு சட்டப்படி மல்லிகா மீதும், பட தயாரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பன்வாரி கொலை வழக்கு
அதில், ‘கடந்த 2012ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த பன்வாரி தேவி என்ற நர்சின் கொலை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது. இதுதொடர்பாக 2 அரசியல்வாதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மலிவான விளம்பரம்
வர்த்தக நோக்கத்துக்காகவும் படத்தின் பப்ளிசிட்டிக்காகவும் தேசிய கொடியை மல்லிகா ஷெராவத் போர்த்தியிருப்பது போல் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கும், விளம்பரத்துக்கும் தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டிருந்தார்.

மல்லிகாவுக்கு நோட்டீஸ்
இந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி சஞ்சய்குமார் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கு தொடர்பாக 3 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், பட தயாரிப்பாளர் மற்றும் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மல்லிகாவை கைது செய்ய
இதனிடையே மல்லிகா ஷெராவத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாருக்கு உத்தரவிடக்கோரி மேலும் இருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

2 வது வழக்கு
இதனடிப்படையில் மல்லிகா ஷெராவத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மல்லிகா ஷெராவத் மீது தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கரீம்நகரில் வழக்கு
தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே கரீம்நகர் போலீசார் மல்லிகா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications