குஜராத்தில் காட்டுமிராண்டித்தனம்.. குதிரையில் தலித் ஏறக்கூடாதா? மாப்பிள்ளையை தாக்கிய சாதி வெறியர்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த திருமண மாப்பிள்ளை குதிரையில் சென்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆதிக்க சாதி வெறியர்கள், மாப்பிள்ளையையும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகிவிட்டதாகவும், இந்தியாவில் அதிக வருவாய் ஈர்க்கும் மாநிலங்களில் இதுவும் ஒன்று எனவும் அதன் முன்னேற்ற புராணங்களை பலர் பாடி வருகிறார்கள். குஜராத் மாடலை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். எவ்வளவுதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும் அங்கு பிற்போக்குத்தனமும், சாதி மத வெறியும் ஊறிப்போய் கிடப்பதை பல்வேறு சம்பவங்களின் மூலம் பார்க்க முடிகிறது.

இந்தியா முழுவதும் ரத்தக் கரை ஏற்படுத்திய மதக் கலவரம் ஏற்பட்ட மாநிலம் என்ற பெயர் குஜராத்தை விட்டு 22 ஆண்டுகளாகியும் மறையாத நிலையில், அந்த பெயரை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வகையில் சாதி, மதவெறி கொடூரங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன. அந்த வகையில்தான் குஜராத் மாநில தலைநகரான காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சதாசனா கிராமத்தில் ஒரு சாதிய கொடூரம் அரங்கேறி இருக்கிறது. ஆதிக்க சாதியினர் தலித் சமுதாயத்தை சேர்ந்த திருமண மாப்பிள்ளையையும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.
இந்த கொடூர தாக்குதலை நடத்தும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்துவிட்டார்கள் என்று தெரியுமா? மாப்பிள்ளை குதிரை மீது ஏறியதுதான். வட மாநிலங்களில் குதிரை மீது மாப்பிள்ளை ஏறுவது பாரம்பரியமான நடைமுறைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது ஆதிக்க சாதியினருக்கு மட்டும்தான். கலாச்சாரம் பண்பாடு என்ற பெயரில் காலம் காலமாக காலணி அணிய அனுமதி மறுக்கப்பட்டு, ஆதிக்க சாதியினரின் தெருவுக்குள் நுழைய தடை செய்யப்பட்ட தலித்துகள் இன்று குதிரையில் ஏறி அமரும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்களே என்ற குரோதத்தில் சாதி வெறியர்கள் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.
A #Dalit groom was assaulted for riding a horse in his wedding procession in a village in #Gujarat's #Gandhinagar district. Police have rounded up four persons from upper caste Thakor community. pic.twitter.com/SQKyiQkLvt
— Hate Detector 🔍 (@HateDetectors) February 13, 2024
குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி தாக்கி இருக்கிறது சாதி வெறி கும்பல். குதிரை மீது அமர்ந்திருந்த மாப்பிள்ளை விகாஸை தாக்கி கீழே தள்ளிய அந்த கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட திருமண மாப்பிள்ளையின் உறுவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மாப்பிள்ளையின் உறவினர் சஞ்சை சாவ்டா காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், “குதிரையில் இருந்து மாப்பிள்ளையை கீழே தள்ளி ஓங்கி அறைந்தார்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
“எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் ஏறவே கூடாது என்று சொல்லி அவர்கள் தாக்கினார்கள். காரில் ஏறி செல்ல வற்புறுத்தினார்கள்.” என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் அகிய 4 பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். கைதான 4 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications