ஊழல் வழக்கு குற்றவாளிகளை சிபிஐ இயக்குநர் சந்தித்தது தவறு: உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
டெல்லி: ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சந்தித்தது மிகவும் தவறான செயல் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையை சீல் வைத்த உறையில் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மொத்தம் 15 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சிபிஐ இயக்குநரான ரஞ்சித் சின்ஹா தனது அரசு பங்களாவில் அலுவல்பூர்வ முகாம் அலுவலகத்தை வைத்துள்ளார். அந்த வகையில் அவரைச் சந்திக்க யார் வந்தாலும் அதை அலுவல்பூர்வமாகவே கருத வேண்டும். பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தையும் அலுவல்பூர்வ ஆவணமாகவே கருத வேண்டும்.
இதை சிபிஐ இயக்குநரின் தனிப்பட்ட விஷயமாகவோ, தனி மனித உரிமை மீறலாகவோ கருத முடியாது. எனவே, இந்த விவகாரத்தில், அலுவல் ரகசியங்கள் காப்புச் சட்டத்தின்படி சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா எவ்வித உரிமையோ, சலுகையோ பெற முடியாது.
ஒரு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளபோது அதில் தொடர்புடையவர்களையோ, அவர்களின் பிரதிநிதிகளையோ புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் சந்திப்பது சட்டவிரோதமாகக் கருதப்படலாம். வருகைப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சிலரைச் சந்தித்ததை ரஞ்சித் சின்ஹாவே ஒப்புக் கொள்கிறார். இதுபோன்ற செயல்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்குமா என்பதையும் நீதிமன்றம் ஆராயலாம்.
ரஞ்சித் சின்ஹாவின் வீட்டு பார்வையாளர் வருகைப் பதிவேடு ஆவணங்களை அளித்தவரின் பெயரை பிரசாந்த் பூஷண் வெளியிட்டால் அது சம்பந்தப்பட்ட நபருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற வாதத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளலாம். உயர் பதவியில் வகிப்போர் செய்யும் தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவும் இதுபோன்ற நபர்களின் பெயர்களை வெளியிடுவதோ அல்லது அதற்கு நிர்பந்தம் செய்வதோ, ஊழலுக்கு எதிரானவர்கள் பற்றி தகவல் தருவோர் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, ஆவணம் அளித்தவரின் பெயரை வெளியிடும்படி கடந்த செப்டம்பர் 15-ந் தேதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற பரிசீலிக்கலாம்.
இவ்வாறு ஆனந்த் குரோவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications