கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை: வாசல்களில் அத்தப்பூ கோல அலங்காரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வாசல்களில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்து பண்டிகையை வரவேற்கின்றனர்.
தமிழ் ஆண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் இருப்பது போல், மலையாள ஆண்டின் முதல் மாதமாக ‘சிங்கம்' என்ற மாதம் நடைமுறையில் உள்ளது. பருவ மழைக்காலம் முடிந்து, வயல்வெளிகள் செழித்து எங்கும் பசுமை நிறைந்திருக்கும், இந்த மாதத்தில்தான் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்ததான ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.

பத்து நாட்கள் பண்டிகை
சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை தொடர்ச்சியாக 10 நாட்கள் இந்த பண்டிகை நடைபெறும்.

கசவு புடவை கட்டி
ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும், மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அன்றைய தினம் கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவார்கள். இது கேரள பாரம்பரிய உடையாகும். இந்த வெண்மை நிற ஆடை, மக்கள் தங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருப்பதை உணர்த்தக் கூடிய வகையில் உடுத்தப்படுவதாகும்.

அத்தப்பூ கோலமிட்டு
பண்டிகை நடைபெறும் 10 நாட்களும், பெண்கள் தங்கள் வீட்டின் முன்பு ஒரு குழுவாக சேர்ந்து பூக்களால் ஆன கோலங்களை போட்டு ஆடிப்பாடி மகிழ்வார்கள். இந்த பூக்கோலம் ‘அத்தப்பூ கோலம்' என்று அழைக்கப்படும்.

அத்தம் தொடங்கி
ஓணம் திருவிழா நடைபெறும் 10 நாட்களுக்கும், தனித்தனியாக ஒவ்வொரு நாளுக்கும் தனிப் பெயர் கொடுத்து கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் முதல் நாள் ‘அத்தம்' என்றும், இரண்டாம் நாள் ‘சித்திரா', மூன்றாம் நாள் ‘சுவாதி' என்றும் பெயரிட்டு அழைக்கப்படும். இந்த தினங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை அன்பளிப்பாக கொண்டு, தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.

64 வகையான உணவு
‘விசாகம்' என்று பெயரிட்டு அழைக்கப்படும் நான்காம் நாளில், ஆறு சுவைகளில், கசப்பு தவிர மற்ற சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இந்த உணவுத் திருவிழாவை, ‘ஓணம் சத்யா' என்று கூறுவார்கள்.

பாயாசத்தோடு விருந்து
புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கை பிடித்திருக்கும். இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக ‘இஞ்சிக்கறி', ‘இஞ்சிப்புளி' ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வார்கள்.

படகுப் போட்டி
ஐந்தாம் நாள் ‘அனுஷம்' (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் ‘வஞ்சிப்பாட்டு' என்ற மலையாள பாரம்பரியப் பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது சிறப்பம்சம் ஆகும்.

திருவோணம் வந்தல்லோ
ஆறாம் நாள் ‘திருக்கேட்டை' (திரிக்கேட்டா), ஏழாம் நாள் ‘மூலம்'. எட்டாம் நாள் ‘பூராடம்'. ஒன்பதாம் நாள் ‘உத்திராடம்' என்ற பெயர்களில் கொண்டாடப்படும் திருவிழாவானது, பத்தாம் நாளில் ‘திருவோணம்' என்ற கொண்டாட்டத்துடன் நிறைவுபெறும்.

யானைகளுக்கு அலங்காரம்
10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும். ஓணம் பண்டிகையில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு, இந்த யானைத் திருவிழாவாகும்.

மகாபலி மன்னன்
கேரளாவை ஆண்ட மகாபலி மன்னன் ஆட்சியின் போது மக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.அந்த மன்னன் சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார். அவரது கொடை தன்மையை சோதிக்க எண்ணிய மகாவிஷ்ணு குள்ளமான வாமன அவதாரம் எடுத்து அவரிடம் சென்று தனக்கு 3 அடி நிலம் கேட்டார். மகாபலி மன்னனும் அதற்கு சம்மதித்தார். உடனே மகா விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து 3 உலகங்களையும் 2 அடியால் அளந்து விட்டு 3-வது அடிக்கு இடம் கேட்டார். அதற்கு மகாபலி மன்னன் தனது தலையை காட்டினார்.மகாவிஷ்ணு அந்த மன்னன் தலைமீது காலை வைத்து பூமிக்குள் அமிழ்ந்து போக செய்து முக்தி வழங்கினார்.

மக்களை காண வரும் மகாபலி
அப்போது மகாபலி மன்னன் தான் ஆட்சி புரிந்து வந்த நாட்டு மக்களை ஆண்டுக்கு ஒரு முறை வந்து பார்க்கும் வரத்தை தனக்கு அளிக்கும் படி கேட்டார். மகாவிஷ்ணுவும் திருவோண நாளன்று அவர் வந்து மக்களை பார்க்க வரம் வழங்கினார். அதன்படி ஒவ்வொரு திருவோண நாளன்றும் மகாபலி மன்னர் நாட்டு மக்களை பார்க்க வருவதாக ஐதீகம்.

களை கட்டியுள்ள பண்டிகை
எனவே தங்களை காணவரும் மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்காக அந்த நாளை ஓணப்பண்டிகையாக கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு வருகிற 6-ந்தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கேரளாவில் கொண்டாட்டங்களும், அத்தப்பூ கோலமும் களைகட்டியுள்ளன.

குமரி மாவட்டத்திலும்
கேரளாவின் எல்லைப்பகுதியான குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களைகட்டியது. இங்கும் அத்தப்பூ கோலம் வீட்டு வாசல்களை அலங்கரிக்கின்றன.
மேலும் பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் திற்பரப்பு, குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை போன்ற பகுதிகளிலும் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் கண்ணை கவரும் வகையில் போடப்பட்டுள்ளது.

சென்னை, கோவையிலும்
தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, சென்னை உள்பட பல்வேறு பகுதியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மலையாள மக்கள் தங்கள் வீடுகளை அத்தப்பூ கோலங்களால் அலங்கரித்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications