எல்லா தப்பையும் நீங்க தான் செஞ்சீங்க..YSR காங்கிரஸை விளாசிய சந்திரபாபு! மத்திய அரசுக்கு ஒரு கொக்கி!
அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து அத்துமீறல்களின் விளைவுகளை தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும், ஆந்திராவிலும் டெல்லியிலும் என்டிஏ ஆட்சி நடக்கும் நிலையில், ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வானத்தில் ஓட்டை விழுந்தது போல கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளன.

குறிப்பாக ஆந்திராவில் விஜயவாடா இருந்த சுவடு தெரியாமல் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. வீடுகள், கார்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல், கழுத்தளவு நீரில் மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றன.
மேலும் மக்கள் ஹெலிகாப்டர் என்டிஆர்எஃப் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதனால் சாலையிலேயே பலர் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். கார்கள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியவில்லை. பெட்ரோல் நிலையம், கேஸ் ஸ்டேசன்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கும் நிலையில் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர்.
குறிப்பாக என்டிஆர் மாவட்டத்தில் பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கிராம மக்கள் அங்கே சிக்கி இருக்கின்றனர். சில இடங்களில் கயிறு கட்டி மக்களை மீட்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. கனமழையால் மூழ்கி இருக்கும் ஆந்திராவில் ரயில் சேவையும் முற்றிலும் முடங்கி இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆந்திரா வழியாக செல்லும் ரயில்களின் சேவை வேறு மார்க்கங்களில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில மீட்பு குழுவினர், இணைந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திராவிலும் டெல்லியிலும் என்டிஏ ஆட்சி நடக்கும் நிலையில், ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றார். இதுதொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு," ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து அத்துமீறல்களின் விளைவுகளை தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வெள்ள பாதிப்புகளுக்கு இப்போது தெலுங்கு தேசம் கட்சியை குற்றம் சாட்டுகிறார்கள்.
அனைத்து தவறுகளையும் செய்த அவர்களால் எப்படி தெலுங்கு தேசம் கட்சியை குற்றம் சாட்ட முடியும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான குறைபாடுகள் இருந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கிருஷ்ணா நதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாக்கப்பட்டன. கிருஷ்ணா நதியில் தண்ணீர் செல்ல முடியாத நிலையில், அனைத்து தண்ணீரும் ஊருக்குள் புக வேண்டிய நிலையை ஏற்படுத்தியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி. ஆனால் அதே சமயம் இதையெல்லாம் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. நம் மக்களுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.
சாமானியனுக்கு என்ன தேவை என அறிந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது. இந்த நெருக்கடியான காலகட்டத்தை கூட ஒரு வாய்ப்பாக மாற்று பணியாற்ற வேண்டும். ஆந்திர மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை அதே போன்ற நல்ல நம்பிக்கையுடன் காப்பாற்ற விரும்பிகிறேன். மக்கள் அனைவரும், நாங்கள் கூறுவதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆந்திராவிலும், என்.டி.ஏ. ஆட்சி தான்.. டெல்லியிலும் எண்டிஏ ஆட்சிதான் நடக்கிறது. இதனால் ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications