‛‛4வது முறை’’.. ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு.. ஆரத்தழுவிய வாழ்த்திய பிரதமர் மோடி
அமராவதி: ஆந்திரா முதல்வராக 3வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவி மேடையிலேயே வாழ்த்தினார்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலுக்கு ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்து களமிறங்கியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் இணைந்தன.
ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்தார். இதையடுத்து நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு சட்டசபையில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் அப்துல் நசீர் அவருக்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழா விஜயவாடா அருகே உள்ள கேசராப்பள்ளி ஐடி வளாகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே 3 முறை முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்றார்.
இந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் அமைச்சர்கள் பதவியேற்றனர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷ், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பவன் கல்யாணுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜக தலைவர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்தும் பதவியேற்பு விழாவில் பங்கேற்று சந்திரபாபு நாயுடுவை வாழ்த்தினார். சந்திரபாபு முதல்வராக பதவியேற்றபோது மேடையில் பிரதமர் மோடி அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இதனை பார்த்த பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் உற்சாகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications