தேர்தல் செலவுக்கு பணம் இல்லை.. போட்டியில் இருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்.. ஒடிசாவில் அதிர்ச்சி!
புவனேஸ்வர்: தேர்தல் பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசாரித்தா மொஹந்தி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுசாரித்தா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் அருப் பட்நாயக்கும், பா.ஜனதா சார்பில் சம்பித் பத்ராவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், புரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுசாரித்தா மொஹந்தி போட்டியில் இருந்து விலகுவதாகவும், சீட்டை திருப்பி அளிப்பதாகவும் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கு, பிரச்சாரம் செய்வதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும், இதனால் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுசாரித்தா மொஹந்தி செய்தியாளர்களுடம் பேசுகையில், "நான் செய்தியாளராக பணியாற்றுகிறேன். எனது வருவாய் மிகவும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தேர்தல் பிரச்சார செலவுக்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட முயன்றேன். ஆனால் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.
பிஜு ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் பணத்தை வாரியிறைத்து வருன்றனர். என்னிடம் பணம் இல்லை, கட்சி தரப்பிலும் பணம் வழங்க மறுத்துவிட்டனர். பாஜக அரசு, கட்சி நிதியை முடக்கியுள்ளது. எனவே வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகி உள்ளேன். ஒடிசாவின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை கட்சி தலைமை நிறுத்தி உள்ளது. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம்." எனத் தெரிவித்துள்ளார்.
சுசாரித்தா மொஹந்தி கடந்த 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பிஜேடி வேட்பாளர் பினாகி மிஸ்ராவிடம் தோல்வியைத் தழுவி இருந்தார். புரி மக்களவைத் தொகுதியில் வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். எனவே புரி தொகுதிக்கு புதிய வேட்பாளரை காங்கிரஸ் தலைமை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications