தேசிய கட்சிகளை கதற விட்ட சிக்கிம்..! படுதோல்வி பாஜக.. காங்கிரஸால் நோட்டாவை கூட ஜெயிக்க முடியலையே!
கேங்டாக்: மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில் சிக்கிமில் பாஜகவும் காங்கிரசும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் நிலைமை தான் படுமோசமாக இருக்கிறது.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி நேற்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
பாஜக: அதனைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் இந்தியாவின் பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் பொதுமக்களிடம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பாலான நிறுவனங்களின் கணிப்பு பாஜகவே மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதுதான். 350 தொகுதிகளில் இருந்து 400 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றே கூறியிருக்கின்றன.
சிக்கிம் தேர்தல்: மக்களவை தேர்தல் மட்டுமல்லாது சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒடிசா, ஆந்திர பிரதேசத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையோடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
எஸ்கேஎம் அசத்தல்: இந்நிலையில் சிக்கிம் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சிக்கிம் மாநிலத்தை ஆளும் சிக்கிம் கிரந்திக்காரி மோர்ச்சா பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க இருக்கிறார்.
பாஜக படுதோல்வி: சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளில் 31ஐ கைப்பற்றி க்ளீன் ஸ்வீப் வெற்றியை பதிவு செய்தது எஸ்கேஎம் கட்சி.. எஸ்டிஎஃப் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. பல மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் இந்தியாவை ஆளும்கட்சியாகவும் இருக்கும் பாஜக இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது 31 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இதே போல தேசிய கட்சியான காங்கிரஸும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
நோட்டா வெற்றி: 12 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 58.29% வாக்குகளை பெற்ற நிலையில், சிக்கிம் ஜனநாயகம் முன்னணி 27 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜக 5.19 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 0.31 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. நோட்டாவுக்கு 0.99 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியை நோட்டா தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications