கேரள சட்டசபைக்குள் வெடிகுண்டு எடுத்து வந்த எம்எல்ஏவால் பரபரப்பு!
திருவனந்தபுரம் : காங்கிரஸ் எம்எல்ஏ திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் கேரள சட்டசபைக்குள் சபாநாயகரிடம் கண்ணீர் புகை குண்டுகளை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் இன்று கேரள சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டை கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணீர் புகை குண்டை சபாநாயகரிடம் காட்டிய ராதாகிருஷ்ணன், கடந்த வாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் போராட்டக்காரர்களை போலீசார் காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்துள்ளதாக தெரிவித்தார்.

போலீஸ் ராஜ்யம் இது தானா. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைக்க காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தியுள்ளனர் என்று ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று கேரளாவில் நடக்கும் போராட்டங்களின் போது பயன்படுத்தப்படும் வெடிகளும் காலாவதியானவையாகவே இருக்கின்றன. இதனால் சுகாதாரப் பிரச்னை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராதாகிருஷ்ணன் சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டை கொண்டு வந்ததற்கு எல்டிஎஃப் கட்சி எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து சட்டசபையில் பேசிய போது ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கொண்டு வந்த கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தும் நிலையில் இருந்திருந்தால் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்றார்.
இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ தான் கொண்டு வந்திருந்த பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை சட்டசபை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சட்ட விதிகளை மீறி இருக்கிறாரா என்பது கண்டறிப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் சட்டசபை உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications