'பரம்பரை வரி’ கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை காங்கிரஸ் பறிக்க முயற்சிக்கிறது.. விடாத பிரதமர் மோடி
ராய்பூர்: முன்னோர்கள் வழியாக கிடைத்த சொத்துக்களுக்கு பரம்பரை வரியையும் நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
லோக்சபா தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் 82 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

2 ஆம் கட்ட தேர்தலுக்கன அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பொதுமக்களின் சொத்துகளையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தேர்தல் களத்தில் மாறியிருக்கிறது.
மோடியின் பேச்சு வெறுப்பூட்டும் விதமாக இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தன. எனினும், பிரதமர் மோடி சரமாரியாக காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், இன்று சத்தீஷ்கரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி 'பரம்பரை வரி' விதிப்போம் என்று சொல்கிறது என பேசினார்.
பிரதமர் மோடி கூறியதாவது:- பரம்பரை வரியையும் நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இளவரசர் மற்றும் ராயல் ஃபேமிலியின் ஆலோசகர் (சாம் பிட்ரோடோ) முன்பு ஒருமுறை கூறும் போது நடுத்தர மக்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்றார். பரம்பரை வரி விதிப்போம் என்று காங்கிரஸ் சொல்கிறது.
பெற்றோர்கள் மூலம் வரும் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ். கடினமாக உழைத்து நீங்கள் சம்பாதித்து இருக்கும் செல்வம் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்காது. மாறாக காங்கிரஸ் கட்சி உங்களிடம் இருந்து அவற்றை பறித்துவிடும்.
நீங்கள் வாழும் வரை உங்கள் மீது அதிகப்படியான வரிகளை விதித்துவிட்டு, உயிரிழந்த பிறகு, அந்த பரம்பரை வரி என்ற சுமையையும் உங்கள் மீது விதிப்பார்கள். மொத்த காங்கிரஸ் கட்சியும் நமது முன்னோர்கள் சொத்து என்று கருதி, தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்தவர்கள்தான், இந்திய மக்கள் தங்கள் சொத்துக்களை தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதை விரும்பவில்லை" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications