தனி மெஜாரிட்டி.. ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி தான்! கோட்டைவிடும் பாஜக! பரபர கருத்து கணிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆட்சியை பிடிப்பது யார் என்பது தொடர்பாக பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், பாஜக 2வது இடம் பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சச்சின் பைலட் உள்ளார். இங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தானில் ஒரு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2018 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இதனால் வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் குறித்து ‛போல் டிராக்கர்' சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது ஜூலை மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5 ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 25 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்தது. அதோடு ராஜஸ்தானில் அதிகாரத்தை பிடிக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்படும் என்பது தெளிவாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள ‛போல் டிராக்கர்' கருத்து கணிப்பின் முடிவின் படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 46.2 சதவீத ஓட்டுகள் பெறும் என கூறப்பட்டுள்ளது
தொகுதி அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் குறைந்தபட்சம் 108 முதல் அதிகபட்சமாக 124 தொகுதிகள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி அதனை விட அதிக இடங்களில் வாகைசூடி ஆட்சியை தக்கவைக்கும் என்பது இந்த கருத்து கணிப்பின் மூலம் தெளிவாகிறது.
மாறாக பாஜக வரும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 42.6 சதவீத ஓட்டுகளை பெறும். அதோடு குறைந்தபட்சம் 67 முதல் அதிகபட்சமாக 86 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்று மீண்டும் எதிர்க்கட்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றவர்கள் 11.2 சதவீத ஓட்டுகளோடு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 12 தொகுதிகள் வரை கைப்பற்றுவார்கள் என போல் டிராக்கர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதாவது அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல்களால் மக்கள் பாஜகவுக்கு ஓட்டளிப்பார்கள். இதன்மூலம் ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றலாம் என பாஜக கணக்கிட்டது.
ஆனால் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையேயான மோதல் என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது இந்த கருத்து கணிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் பாஜகவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications