ஹரியானா தேர்தல்: பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்த நாட்டின் பணக்கார பெண் சாவித்ரி ஜிந்தால்
சன்டிகர்: ஹரியானாவின் ஹிஸார் தொகுதியில் போட்டியிட்ட நாட்டின் பணக்கார பெண்ணான சாவித்ரி ஜிந்தால் பாஜக வேட்பாளர் கமல் குப்தாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
ஹரியானா சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் ஹரியானா மாநில முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான புபிந்தர் சிங் ஹூடா தோல்வியை ஒப்புக் கொண்டு பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹரியானா தேர்தலில் ஹிஸார் தொகுதியில் ஹூடா அமைச்சரவை உறுப்பினரும், இந்தியாவின் பணக்கார பெண்ணான சாவித்ரி ஜிந்தால் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கமல் குப்தாவிடம் 13 ஆயிரத்து 646 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
2005 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஹிஸார் தொகுதியில் இருந்து தேர்வான சாவித்ரி பல கோடி ரூபாய் மதிப்பள்ள ஓ.பி. ஜிந்தால் குழுமத்தின் தலைவர் ஆவார். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் சாவித்ரிக்கு 12வது இடம் கிடைத்தது. அந்த பட்டியலில் தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, வெளிநாடுவாழ் இந்தியரான லக்ஷ்மி மிட்டல் ஆகியோரும் இடம்பிடித்தனர்.
அதே சமயம் இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி தான் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications