கடலுக்கு அடியில் கலக்கல் திருமணம்.. கேரளாவில் காதல் ஜோடி அசத்தல் !
கேரள மாநிலம் கோவளத்தை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை காலை திருமணம் செய்துகொண்டார்.
திருவனந்தபுரம்: இந்தியாவைச் சேர்ந்த மணமகன், ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்த மணப்பெண்ணை கேரள மாநிலம் கோவளத்தில் உள்ள கடலின் அடியில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகில் பவார் என்பவரும் ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்த யுனிகா போக்ரான் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்தனர். இதையடுத்து, திருமணத்தை கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி கடலுக்கு அடியில் சென்று செய்யலாம் என முடிவெடுத்தனர். இத்திருமணம் கோவளத்திலுள்ள தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டின்பேரில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்திற்காக கேரளா மாநிலம் கோவளத்தையொட்டிய கடலுக்கு அடியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நீர் மூழ்கும் சாதனங்கள், ஸ்கூபா உடைகளின் உதவியுடன் மணமக்கள் கடலுக்கு அடியில் சென்று மோதிரங்களை மாற்றிக் கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில், மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தத் திருமணத்தை மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் கடலுக்கு அடியில் நடந்த முதல் திருமணம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக திருமணங்கள் மண்டபகங்கள், உணவு விடுதிகள் மற்றும் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதிலும் புதுமை செய்ய விரும்பிய இவர்கள் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் திருமணம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications