ராகுல் காந்தியை தோற்கடிக்க வயநாட்டில் களமிறங்கும் பெண் இடதுசாரி தலைவர்- தமிழக மருமகள்- யார் இவர்?
வயநாடு: லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரிகள் வேட்பாளராக மூத்த தலைவர் ஆனி டி.ராஜா களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் கேரளாவில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகளின் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான். இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கவே முடியாது என்பது யதார்த்தம். இதனால் கேரளாவில் "இந்தியா" கூட்டணி என்பது கிடையாது.

ராகுல் அபாரமாக வென்ற வயநாடு: 2019- லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். ஆனால் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அதிர்ச்சி தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. இத்தொகுதியில் மொத்தம் 64.94% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் பிபி சுனீர் வெறும் 25.24% வாக்குகளைத்தான் பெற முடிந்தது. 2009-ம் ஆண்டு முதல் வயநாடு தொகுதி காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

ராகுலுக்கு எதிராக ஆனி ராஜா?: தற்போதைய 2024 லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில்தான் போட்டியிடுவார் என கூறப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக வலுவான வேட்பாளரை களமிறக்க இடதுசாரிகள் முடிவு செய்துள்ளனராம். தற்போதைய நிலையில் இடதுசாரிகளின் வேட்பாளராக ஆன்னி ராஜா இருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டு மருமகள் ஆனி ராஜா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா (அன்னி ராஜா, ஆன்னி ராஜா). கேரளாவின் கண்ணூரை பூர்வீகமாக கொண்ட ஆனி ராஜா தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். ஆனி ராஜாவின் கணவர் டி. ராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அந்த வகையில் ஆனி ராஜா தமிழ்நாட்டு மருமகள்தான். கடந்த ஆண்டு திமுக எம்பி கனிமொழி முன்னின்று நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்றவர். தமிழ்நாட்டில் இடதுசாரிகள் இயக்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறவர். வயநாடு லோக்சபா தொகுதியில் ஆனி டி.ராஜா களமிறங்கினால் ராகுல் காந்திக்கு கடும் போட்டியை உருவாக்குவார் என்பது இடதுசாரிகளின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications