டி.கே.ரவி ஐ.ஏ.எஸ் தற்கொலை… அரசியலாக்கப்படும் அதிகாரியின் மரணம்
பெங்களூரு: ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவியின் மரணம் தற்கொலைதான் என்று உறுதிபட தெரிவித்துள்ள கர்நாடகா சி.பி.சி.ஐ.டி போலீஸ். ஆனால் இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்பதுதான் அனைவரின் முன் நிற்கும் கேள்வியாகும்.
நேர்மையானவர், தைரியசாலி என பெயர் எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி சில நாட்களுக்கு முன்னர் கோரமங்களாவில் உள்ள தனது வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார். இந்த மரணம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது சாவுக்கு பின்னால் மணல் கொள்ளையர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த பிரச்னை கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. இன்று தும்கூர் பகுதியில் பந்த் நடக்கிறது.
ரவியின் மரணத்தை தற்கொலை என, மாநில அரசு கூறியதையும், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க மறுப்பதையும் கண்டித்து, பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை, தங்கள் குமுறல்களை கொட்டித் தீர்த்தனர். இதற்காகவே #DKRavi என்ற பெயரில் உருவாக்கப்பட்ட,'ஹேஸ்டேக்' தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டில், கடந்த இரண்டு நாட்களாக முதலிடம் பிடித்ததது.

துருவும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்
ரவியின் மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது என்று கூறினாலும் அவரது மரணம் தற்கொலைதான் என்று போலீசாரும் கர்நாடக அரசும் அடித்துக் கூறுகிறது. ரவியின் மொபைல் போன், ஐ.பேட், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்து அதில் உள்ள தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

செல்போனில் பேசியது யார்
ரவியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் பற்றி ஆய்வு செய்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார்,அவரது கார் டிரைவர், உடன் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 60 பேரிடம் விசாரணை செய்துள்ளனர். அவரது மரணத்திற்கு முன்பாக அவரது நெருங்கிய தோழியும், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஒருவரிடம் இருந்து 73 மிஸ்டுகால்கள் வந்துள்ளதை சி.பி.சி.ஐ.டி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதுபற்றியும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சந்தேக கேள்விகள்
அந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவியின் பேட்ச் மெட். அவரிடமும் ரவியின் மரணம் பற்றிய கேள்விகளை கேட்டுள்ளனர். நேர்மையான அதிகாரி என்று குறுகிய காலத்தில் பெயரெடுத்த டி.கே.ரவியின் மரணத்தில் சொந்த விவகாரம்தான் காரணமாக இருக்கக்கூடும் என்பது அதிகாரிகளின் சந்தேகமாகும். இந்த தொலைபேசி அழைப்புகள்தான் அவரது மரணத்திற்கு விடை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.

பாஜக எம்.பிக்கள் ஆர்பாட்டம்
அதே சமயம் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கை வலியுறுத்தி தும்கூர் பகுதியில் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டசபை ஒத்திவைப்பு
ரவியின் மரணம் குறித்த சர்ச்சை இன்று கர்நாடக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. சிபிஐ விசாரணை கோரி எதிர்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வெளியேயும் தர்ணாவில் ஈடுபட்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

சி.பி.ஐ. விசாரணை
இதனிடையே அதிகாரி ரவி இறந்த 3வது நாள் காரியம் இன்று நடக்கிறது. மனைவி புசுமா, ஹினிகா தாலுகா தொட்டக்குப்பலூவில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் கூடியுள்ளனர். இந்த வீட்டில் இருந்த ரவியின் பெற்றோர்கள் கூறுகையில், மாநில அரசின் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் நாங்கள் சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம் என்றனர்.

அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய நேர்மையான அதிகாரியின் மரணம் என்னை மிகவும் பாதித்து விட்டது' என, கூறியுள்ளார்.

சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்
ரவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முதல்வர் சித்தராமையா திருத்த முயற்சி செய்கிறார் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த அதிகாரியின் மரணம் நாடு முழுவதும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு நடந்துகொள்ளும் விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

நம்பிக்கை இல்லை
ரவியின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது வீட்டுக்கு செல்லாமல் விக்டோரியா மருத்துவமனைக்கு சித்தராமையா சென்றார். இதன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கையை திருத்த முதல்வர் முயற்சி செய்கிறாரா? நேர்மையாக அதிகாரிகள் இங்கு இருந்தாலும் விசாரணை அறிக்கை சரியாக வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.

சாட்சிகள் அழிப்பு
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை ஆகும். அந்த அதிகாரியின் தந்தை மற்றும் மாமனார் ஆகியோர் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாநில அரசு தயங்குவது ஏன்? சி.ஐ.டி. விசாரணையின் இடைக்கால அறிக்கையில் தற்கொலை என்று குறிப்பிடுவார்கள். அதற்குள் சாட்சிகள் அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்பதும் குமாரசாமியின் குற்றச்சாட்டாகும்.

பரவும் வதந்திகள்
முதல்வர் சித்தராமையா சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கல்வித்துறை அமைச்சருடன் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்றது ஏன்? ரவியின் தனிப்பட்ட புகழை கெடுக்கும் விதமாக குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்திகள் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பரப்பப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது ஆகும் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

சித்தராமைய்யா மறுப்பு
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையை திருத்த நான் முயற்சி செய்வதாக குமாரசாமி கூறுவது சரியல்ல என்று முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார். இது அவரது பொறுப்பற்ற பேச்சை காட்டுவதாக உள்ளது. ரவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவே நான் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்றேன். இதற்கு வேறு அர்த்தம் கற்பிப்பது சரியல்ல.

உண்மையை கண்டுபிடிப்பார்கள்
நான் மருத்துவமனைக்கு சென்றதை குமாரசாமி குறை கூறி இருக்கிறார். எங்கு சென்றாலும் அவரை கேட்டு அனுமதி பெற்ற பிறகே செல்கிறேன். இந்த வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரவியின் மரணத்தை அரசியலாக்கக் கூடாது. சிஐடி போலீஸாரின் விசாரணை மிக நேர்மையாக நடைபெறும். 15 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக பேசலாம் என்று கூறியுள்ளார்.

எடியூரப்பா போராட்டம்
ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே ரவியின் மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதனை வலியுறுத்தி அவரும் பதாகை ஏந்தி போராட்டத்தில் குதித்தார்.

காங்கிரசார் போராட்டம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி தற்கொலையில் பாரதிய ஜனதாவினருக்கு தொடர்பிருப்பதாகவும், அக்கட்சியைச் சேர்ந்த மணல் மற்றும் சுரங்க மாஃபியாக்களின் நெருக்கடியே அவரது தற்கொலைக்கு காரணம் என்றும் காங்கிரசார் குற்றம்சாட்டினர். சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியவாறு, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications