டார்ஜிலிங்கில் மண்ணுக்குள் புதைந்த மக்கள்.. கனமழையால் நிலச்சரிவு! 18 பேர் சடலமாக மீட்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் காலிம்போங் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மழை தொடர்வதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
பலத்த மழை காரணமாக முக்கிய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் சேதமடைந்துள்ளன. சிலிகுரியையும், டார்ஜிலிங்கையும் இணைக்கும் ரோகிணி சாலை, ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் தற்போது வரை 11 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இதில் 3 குழந்தைகளும் அடங்கும்.

சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கிய கனமழை, அண்டை மாநிலங்களான சிக்கிம், பூட்டான் மற்றும் நேபாளத்தையும் பாதித்தது. அங்கு நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டார்ஜிலிங்கில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இரண்டு இரும்புப் பாலங்கள் இடிந்து விழுந்தன. 4 தேசிய நெடுஞ்சாலைகளும், 12க்கும் மேற்பட்ட மாநில சாலைகளும் சேதமடைந்தன. தவிர வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் என பல கட்டுமானங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் 5 குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து மீட்டு வருகின்றன. டார்ஜிலிங், காலிம்போங் மற்றும் மிரிக் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துர்கா பூஜை விடுமுறைக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததால், இந்த பாதிப்பு மேலும் தீவிரமானது.
சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை டார்ஜிலிங்கில் 145 மி.மீ மழையும், காலிம்போங்கில் 131 மி.மீ மழையும் பதிவானது. அதேசமயம் ஜல்பைகுரி 214 மி.மீ மழையைப் பெற்றது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட பலவீனமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த அமைப்பாக மாறி, கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் கனமழையைத் தூண்டியதே இந்த தீவிர மழைக்குக் காரணம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications