அருணாச்சல் பிரதேச மாணவர் கொலை.. டெல்லியில் வட கிழக்கு மாணவர்கள் போராட்டம்
டெல்லி: டெல்லியில் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் நிடோ டேனியம் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து டெல்லி லாஜ்பத் நகர் காவல் நிலையம் முன்பு வட கிழக்கு மாநில மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
20 வயதான அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் நிடோ டேனியம், டெல்லியில் உள்ள வணிக வளாகத்திற்கு ஷாப்பிங்குக்காக போனபோது அவரது ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்து கடைக்காரரும், சிலரும் வம்பு செய்தனர். இதனால் கோபமடைந்த நிடோ, அங்கிருந்து கண்ணாடியை உடைத்து விட்டார்.
இதனால் வெகுண்ட கடைக்காரர் உள்ளிட்ட 5 பேரும் நிடோவை கடுமையாகத் தாக்கி உதைத்துள்ளனர். இதில் நிடோ அடுத்த நாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் வட கிழக்கு மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை லாஜ்பத் நகர் காவல் நிலையம் முன்பு வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், மாணவரைத் தாக்கிய கும்பல் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது உயிரிழப்புக்குக் காரணமானவர்களை ஏன் போலீஸார் கைது செய்யவில்லை. இது துவேஷத் தாக்குதலாகும். இன ரீதியான தாக்குதல் இது. இதை போலீஸார் கையாண்ட விதம் பெரும் வேதனை தருகிறது என்றனர்.
டேனியமின் தந்தை நிடோ பரிமள், அருணாச்சல் பிரதேசத்தின் ரகா தொகுதி எம்.எல்.ஏ ஆவார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இந்த விவகாரம் தொடர்பாக லாஜ்பத் நகர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதி விசாரணைக்கும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications