தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 அதிமுகவினரின் தூக்கு ரத்து- ஆயுள் தண்டனையாக குறைப்பு- சுப்ரீம்கோர்ட்
டெல்லி: தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் 3 மாணவிகள் பலியாக காரணமாக இருந்த 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், உணர்ச்சிவசத்தால் நடந்தது, திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்பதால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டையாகக் குறைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர். இதில் பேருந்துக்குள் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று மாணவியர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதையடுத்து, பேருந்துக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்தது.
இதை சென்னை உயர் நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியும், உச்சநீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதியும் உறுதிப்படுத்தின. இதையடுத்து உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் பெஞ்ச் தங்களது வழக்கை விசாரிக்க வேண்டும் என தூக்கு தண்டனை கைதிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், மற்றும் சுசில் குமார் ஆகியோர், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை என்பது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது பற்றியும், இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்துவரும் நிலையில் தண்டனையை குறைத்தால் அது குற்றவாளிகளுக்கு இரட்டை சலுகைகள் வழங்கியதுபோல் இருக்கும் என்பது குறித்தும் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உணர்ச்சி வசப்பட்டு செய்த தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும், மூவரும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை எரிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications