பிரதமர் மோடியின் கண்ணும், காதும் இவர் தான்! நிர்மலா சீதாராமின் மருமகன் பிரதீக் தோஷி யார் தெரியுமா?
பெங்களூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் பரகலா வாங்மயி, பிரதீக் தோஷி என்பவரை திருமணம் செய்தார். நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதீக் தோஷி பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும், மோடிக்கு அவர் கண்ணும், காதுமாக இருக்கும் பரபரப்பான தகவலும் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் ஆந்திராவின் பரகலா பிரபாகரை திருமணம் செய்தார். நிர்மலா சீதாராமன் பாஜகவில் உள்ள நிலையில் அவரது கணவர் பரகலா பிரபாகர் காங்கிரஸ் ஆதரவாளராக உள்ளார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிப்பதை நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தொடர்ந்து செய்து வருகிறார். பொருளாதார நிபுணரான பரகலா பிரபாகர் சமீபத்தில் கூட 2024ல் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் என விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன்-பராகலா பிரபாகர் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் பரகலா வங்கமயி. இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் பெங்களூர் ஜெயநகரில் வசித்து வரும் நிலையில் எளிமையான முறையில் பரகலா வங்கமயின் திருமணம் நடந்தது.
மத்திய நிதி அமைச்சராக இருந்தாலும் கூட ஆடம்பரம், அலப்பறைகள் ஏதுமின்றி தனது மகள் பரகலா வங்மயிக்கும், குஜராத்தை சேர்ந்த பிரதீக் தோஷிக்கும் நிர்மலா சீதாராமன் திருமணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்பட எந்த அரசியல் கட்சி தலைவர்கள் இன்றி நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்து முடிந்தது. பிராமண சமூக முறைப்படியும், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா அதமரு மடத்தின் தலைவர் விஸ்வபிரிய தீர்த்த ஸ்ரீபாத-வின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்மயியை திருமணம் செய்த பிரதீக் தோஷி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தான் தற்போது புதிய விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது பிரதீக் தோஷி சாதாரண நபர் இல்லையாம். அவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணும், காதுமாக அவர் தான் இருக்கிறாராம்.
ஆம், இது உண்மை தான். இதன் பின்னணி பற்றி கூற வேண்டும் என்றால் பிரதமர் மோடிக்கு, பிரதீக் தோஷிக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான உறவு உள்ளது. இதற்கு முதல் காரணம் குஜராத் தான். பிரதமர் மோடி மற்றும் பிரதீக் தோஷி ஆகியோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். பிரதீக் ஜோஷி சிங்கப்பூர் மேனேஜ்மேன்ட் பள்ளியில் எம்பிஏ படிப்பை முடித்தார்.
அப்போது நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தார். இந்த வேளையில் குஜராத் முதல்வரின் அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக செயல்பட்டார். அதன்பிறகு நரேந்திர மோடி பிரதமரான நிலையில் பிரதீக் தோஷியை தன்னுடன் அழைத்து கொண்டார். 2014 முதல் பிரதமர் அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் வியூக பிரிவில் பிரதீக் தோஷி பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே தான் கடந்த 2019 ம் ஆண்டு இணை செயலாளர் அந்தஸ்து பிரதீக் தோஷிக்கு வழங்கப்பட்டது. தற்போது பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரியாக பிரதீக் தோஷி பணியாற்றி வருகிறார். மேலும் 1961ம் ஆண்டு இந்திய அரசு விதிகளின் படி பிரதமருக்கு செயலக உதவியை பிரதீக் தோஷி செய்து வருகிறார். அதாவது பல்வேறு நியமனங்கள் தொடர்பான முக்கிய கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திடும் முன்பு அதனை பிரதீக் தோஷி தான் பார்வையிடுவாராம். இதனால் தான் பிரதமர் மோடியின் கண்ணும், காதுமாக பிரதீக் தோஷி இருக்கிறார் என விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளையில் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயியும் சாதாரணமானவர் இல்லை. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ ஆங்கிலப்படிப்பை முடித்தார். அதன்பிறகு அமெரிக்காவில் எம்எஸ்சி ஜார்னலிசம் படித்தார். தற்போது பத்திரிகையாளராகவும், சிறப்பு கட்டுரை எழுதும் காலமிஸ்ட்டாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications